“வேணாம்மா இந்த காதல் ” காருடன் சாலையில் தர.. தரவென இழுத்துச்செல்லப்பட்ட பெண்..! மகளை மீட்க தாயின் பாசப்போராட்டம்

0 1374

கோவை கருமத்தம்பட்டியில் தாயுடன் வீட்டுக்கு செல்வதாக கூறி தனியார் மில்லில் இருந்து வெளியே வந்த இளம் பெண் ஒருவர், காதலன் கொண்டு வந்த காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றார். அப்போது மகளின் தலைமுடியை எட்டிப் பிடித்து தடுக்க முயன்ற தாயையும் காருடன் சேர்த்து சாலையில் இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தன்னை விட்டு காதலனின் காரில் ஏறிச்சென்ற மகளை பிடித்துக் கொண்டு “இந்த காதல் வேணாங்கண்ணு.. வீட்டுக்கு வந்துவிடு” என்று தாய் மன்றாட... காதலன் மற்றும் கூட்டாளிகளை மக்கள் மடக்கிப்பிடித்த காட்சிகள் தான் இவை..!

கோவை மாவட்டம் அரசூர் தென்னம்பாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர், சம்பவத்தன்று தாயுடன் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு கருமத்தம் பட்டிக்கு ஆட்டோவில் வந்து இறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் அங்கு நின்ற காரில் ஓடிச்சென்று ஏறினார். அவரை விரட்டிச்சென்ற தாய் , தனது மகளை எட்டிப்பிடிக்க , இதனை கண்டுகொள்ளாத கார் ஓட்டுனர் காரை வேகமாக கிளப்பிக்கொண்டு சென்றார். இதனால் அந்த இளம் பெண்ணின் தாய் சாலையில் தர தரவென இழுத்துச்செல்லப்பட்டதால் அப்பகுதி மக்கள் அந்த காரை மடக்கிப்பிடித்தனர்.

அதற்குள்ளாக காரில் இருந்து இறங்கிய கருப்பு சட்டை அணிந்த இருவர் அந்த பெண்ணின் தாயை கையை எடுக்கும்படி மிரட்டிக் கொண்டிருந்தனர். தவித்து நின்ற தாய்க்கு ஆதரவாக அப்பகுதி ஆட்டோ ஓடுனர்கள் களமிறங்கினர்

“காதல்ன்னா இப்படித்தான் பெண்ண கடத்திட்டு போவீங்களா”..? எனக்கேட்டு முற்றுகையிட்ட மக்கள் அவர்களை காவல் நிலையம் வருமாறு அழைத்தனர். திமிறிய இளைஞரை தட்டி விலகிபோக செய்தனர்

அந்த இளைஞர்களை அங்கிருந்து தப்ப விடாமல் மக்கள் மடக்கிய நிலையில் காரில் இருந்து இறங்கிய இளம்பெண்ணோ, அந்த இளைஞர்களை கட்டிப்பிடித்தபடி நின்றிருந்தார்

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த இளம் பெண்ணை தங்கள் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி கருமத்தம்பட்டி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

விசாரணையில் பட்டுக்கோட்டையை சேர்ந்த அந்தப்பெண், சமூகவலைதளம் மூலம் செல்போன் சாட்டிங்கில் அறிமுகமான மதுக்கரையை சேர்ந்த டேனியல் என்ற இளைஞரை ஒன்றரை வருடங்களாக காதலித்ததாகவும், விபரம் தெரிந்து பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. பெண்ணை தனது ஊருக்கு அழைத்துச்செல்ல வந்த நிலையில், முன் கூட்டியே காதலனுக்கு செல்போன் மூலம் தகவல் சொன்ன அந்த இளம் பெண் காதலனுடன் காரில் தப்பிச்செல்ல முயன்ற போது சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

இளைஞர்கள் காரில் இழுத்துச் சென்றதில் காலில் ரத்தகாயம் ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக காரை இயக்கியதாக அந்த இளைஞர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனால் இளம்பெண்ணை அவர்களுடன் அனுப்ப போலீசார் மறுத்து விட்டனர், தாயுடன் செல்ல இளம் பெண் மறுத்து அடம்பிடித்ததால் முடிவில் அவரை போலீசார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments