மருமகளுக்கு சாப்பாட்டில் விஷம் சயனைடு வைத்த மாமியார்.. 75 நாட்கள் கழித்து சிக்கியது எப்படி ?

0 1222

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் மருமகளுக்கு, சாப்பாட்டில்  விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக மாமியார் உள்ளிட்ட 4 பேரை 75 நாட்களுக்குப் பின் உதகை காவல் துறையினர் கைது செய்தனர். 

நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் சமது மனைவி நிலாபர் நிஷா தம்பதியரின் மகள் ஆஷிகா பர்வீனுக்கும் உதகை காந்தல் பகுதியைச் சேர்ந்த யாஸ்மின், ஜபருல்லா தம்பதியரின் மகன் இம்ரானுக்கும் 2021 ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கணவன் மற்றும் மாமியார் அடித்து துன்புறுத்துவதாக யாஷிகா பர்வின் தனது பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.

இந் நிலையில் கடந்த ஜூன் மாதம் 24 ம் தேதி ஆஷிகா பர்வீன் வலிப்பு ஏற்பட்டு சமையலறையில் கிடப்பதாக பெண்ணின் தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்பு அவரை உதகை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததாக கூறியதால்,
சந்தேகம் அடைந்த பெண்ணின் பெற்றோர், பிரேதத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தங்கள் மகள் சாவில் மர்மம் உள்ளது பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உதகை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து உடற் கூறாய்வு செய்யப்பட்டு கடந்த வாரம் முடிவுகள் வந்தன. இதில் பெண்ணிற்கு சைனைடு விஷம் கொடுத்துள்ளதாகவும், பெண்ணின் கழுத்து, தோள்பட்டை ,விலா எலும்பு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று (சனிக்கிழமை) காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடரந்து ஆஷிகா பர்வீனுக்கு சாப்பாட்டில் சயனைடு விஷம் வைத்து கொன்றதாக மாமியார் யாஸ்மின், அவரது உறவினர் காலீப் , ஆஷிகா பர்வீனின் கணவர் இம்ரான் , கணவரின் தம்பி முக்தார் ஆகிய நான்கு பேரை உதகை போலீசார் கைது செய்தனர்.

ஆஷிகா பர்வீனின் மாமியார் யாஷ்மீனுக்கு 49 வயதாகும் நிலையில் அவரது உறவினரான காலீப் என்பவருடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. சம்பவத்துக்கு சில தினங்களுக்கு முன்பு, யாஸ்மினும் காலீப்பும் ஒன்றாக இருந்ததை ஆஷிகா பர்வீன் பார்த்த நிலையில், இந்த விஷயத்தை வெளியே சொல்லிவிடுவாரோ என்ற காரணத்தினால் ஆஷிகா பர்வீனிற்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுள்ளதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

யாஸ்மினுடன் தகாத உறவில் இருந்த காலீப் ன் வீடு நகைகடைகள் அதிகம் உள்ள பகுதியில் இருப்பதால் நகைகள் உருக்க சைனைடு பயன்படுத்துவதை அறிந்து நகைக்கடையில் இருந்து சைனைடை யாருக்கும் தெரியாமல் எடுத்தாக காலீப் கூறிய நிலையில் அது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments