பேருந்து சாவியை பறித்துக் கொண்டு ஓடிய போதையன் இடையில் நிற்காதா.. இப்ப நின்னுச்சா..?! விரட்டிப் பிடித்த பரபரப்பு காட்சிகள்

0 833

தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு சென்ற தனியார் பேருந்து இடையில் நிற்காது என்றதால் ஆத்திரம் அடைந்த வல்லநாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பேருந்தின் சாவியை பறித்துக் கொண்டு ஓடியதால் பயணிகள் நடுவழியில் தவித்தனர்.

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டுச்சென்ற லயன் என்ற தனியார் பேருந்தின் சாவியை போதை பயணி ஒருவர் பறித்துச் சென்றதால் என்ன செய்வதென்று தெரியாமல் பயணிகள் பேருந்துக்குள் விழிக்க.. சாவியுடன் ஓடியவரை பிடிக்க இயலாமல் ஓட்டுனர் சாலையில் தவித்து நிற்கும் காட்சிகள் தான் இவை..!

பேருந்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு உள்ள சாலையில் நிறுத்தப்பட்டதால், பயணிகளின் தவிப்பு அறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.

ஒருவர் சாவியை பறித்துக் கொண்டு சென்று விட்டார் என்று அவர் சென்ற திசையை நோக்கி கைகாட்டிய பேருந்து ஓட்டுனர்,இரவல் பைக் ஒன்றை வாங்கி அதில் காவலரை ஏற்றிக் கொண்டு அந்த ஆசாமியை விரட்டிச் சென்றார்

ஓடினால் அடையாளம் கண்டு கொள்வார்கள் என நினைத்து, தெருவில் நிதானமாக நடந்து சென்ற அந்த ஆசாமியை மடக்கிப்பிடித்த போலீசார், “பேருந்து சாவியை ஏன் எடுத்தாய்” என்றதும், ‘எங்க ஊரு வல்லநாட்டில் பஸ் நிற்காதுன்னு சொல்ராங்க’... ‘இந்த பஸ்ஸுக்கு பாயிண்டு டூ பாயிண்டு உரிமம் இருக்கா..? என்று பாயிண்ட் பிடித்து பேச ஆரம்பித்தார் அந்த ஆசாமி

பாயிண்டை பிடித்தவரின் சட்டையை மடக்கிப்பிடித்து போலீசார் இழுத்துச்சென்ற நிலையில், இடையில் நிற்காது என்றதால் பேருந்துக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஓட்டுனர் போலீஸ் நிலையம் முன்பு பேருந்தை நிறுத்தியதால் , சாவியை எடுத்துக் கொண்டு ஓடியதாகவும் தெரிவித்த அந்த போதை ஆசாமி, ‘நான் குடிச்சிருக்கேன் என்று நினைக்காதீங்க.. நாளைக்கு குடிக்காம வந்தாலும் இதை செய்வேன்’ என்றார்

‘அப்படியே வாங்க உள்ள போய் பேசலாம்’ என்று போலீசார் அந்த ஆசாமியை காவல் நிலையத்திற்குள் அழைத்துச்சென்றனர். இதன் காரணமாக இடை நில்லா பேருந்து அரைமணி நேரத்தும் மேலாக நடுவழியில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments