தாசில்தார் கழுத்தைப் பிடித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் விசிக பிரமுகர் அத்துமீறல்.. வீடியோ எடுத்ததால் ஆதாரத்துடன் சிக்கினார்..!
சென்னை அயனாவரம் தாசில்தார் அலுவலகத்திற்குள் புகுந்து தாசில்தாரை தாக்கியதாக வி.சி.க வட்ட செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாசில்தாரை கலாய்ப்பதற்கு வீடியோ எடுத்து சாட்சியுடன் வழக்கில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
சென்னை அயனாவரம் சத்தியமூர்த்தி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சந்தானலட்சுமி. இவருக்கு சொந்தமான 1304 சதுர அடி நிலத்தை அளப்பதற்காக அயனாவரம் தாசில்தார் அலுவலகத்தில் ரூபாய் 700 கட்டி பதிவு செய்துள்ளார். அதன்படி கடந்த ஜூலை மாதம் 27ந்தேதி சர்வேயர் ரஞ்சித் குமார் நேரில் சென்று அவருடைய நிலத்தை அளந்து கொடுத்துள்ளார். மேலும், அளந்து கொடுத்ததற்கான அத்தாச்சி படிவத்தையும் சந்தானலட்சுமியின் மகனிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்தநிலையில் கடந்த 20 ஆம் தேதி நில உரிமையாளர் சந்தானலட்சுமிக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி 97வது வட்டச் செயலாளர் அசோக் என்பவர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று நிலத்தை எதிர் தரப்பினருக்கு சாதகமாக அளந்து விட்டீர்கள் எனக் கூறி பெண் ஊழியர்கள் உட்பட அரசு ஊழியர்களை அநாகரிகமாக ஒருமையில் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு அங்கு வந்த தாசில்தார் இது குறித்து கேட்டபோது, தாசில்தார் ரமேஷை அநாகரிகமாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அசோக், தாசில்தாரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தாசில்தார் ரமேஷ், விசிக நிர்வாகியை அறைக்குள் வைத்து பூட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முயன்றார்
தாசில்தார் அலுவலக ஊழியர்கள் உடனடியாக டிபி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் , அசோக் , தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச்சென்றுவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து விசிக நிர்வாகி அசோக் மீது டிபி சத்திரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments