களிறுகள் பிளிற.. பறந்த வாகைப் பூ கொடி... அரசியலிலும் வாகை சூடுவாரா விஜய்?

0 992

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய், அக்கொடியின் வரலாற்று பின்னணி குறித்து விரைவில் நடக்கவுள்ள மாநாட்டில் விளக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய் வெளியிட்டுள்ள கொடிப்பாடலில் அரசியல் கருத்துக்களும், தமிழர் பாரம்பரிய குறியீடுகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ கொடியை இன்று அறிமுகம் செய்தார்.

பின்னர், சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடியை விஜய் ஏற்றி வைத்தார்.

மேலும் கீழும் கருஞ்சிவப்பு நடுவில் மஞ்சள் வண்ணம் கொண்ட கொடியில் நீல, பச்சை நிற நட்சத்திரங்களும், கொடியின் மையப் பகுதியில் இரண்டு யானைகள் பிளிறுவது போன்றும், அதற்கு நடுவில் வாகைப் பூவும் இடம் பெற்றுள்ளன. தமிழர் மரபில் வெற்றி பெற்ற மன்னன் வாகை பூவைச் சூடி கொண்டாடுவது வழக்கம் என தமிழறிஞர்கள் சங்க இலக்கியங்களை சுட்டிக்காட்டுகின்றனர். விழாவில் பேசிய விஜய், புயலுக்குப் பின் அமைதி, ஆர்ப்பரிப்பு என்பது போல் கட்சியின் கொடியின் வரலாற்று பின்னணி குறித்து கட்சி மாநாட்டில் தெரிவிப்பதாக கூறிப்பிட்டார்.

தொடர்ந்து, “தமிழன் கொடி பறக்குது” என தொடங்கும் கட்சியின் கொடிக்கான காட்சிப் பாடலையும் விஜய் வெளியிட்டார். அதில், மக்களை இரு யானைகள் வதைப்பது போன்றும் அப்போது குதிரையில் வந்த தலைவன் உத்தரவிட்டதை அடுத்து 2 வெளிர் நிற யானைகள் அந்த யானைகளை வீழ்த்தி மக்களை காப்பாற்றுவதுபோலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகளுக்கு நடுவே விஜய் தோன்றுவது போன்றும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தை சூசகமாக குறிப்பிடும் வகையில் “மூணெழுத்து மத்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது” என்ற வரிகளும் இப்பாடலில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிகரம் தொட்ட பின்னர் இறங்கி வந்து விஜய் சேவை செய்ய உள்ளதாகவும், ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி காட்டும் காலம் வந்துவிட்டதாகவும் கொடிப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது கட்சியின் சின்னமாக வாகைப் பூவை ஒதுக்குமாறு நடிகர் விஜய் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments