தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் கல்வெட்டை திறந்துவைத்து கட்சி கொடி ஏற்றிய நடிகர் விஜய்

0 493

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில், கல்வெட்டை திறந்துவைத்து, கட்சி கொடியையும் அவர் ஏற்றிவைத்தார்.

மேலும் கீழும், கருஞ்சிவப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் வண்ணத்திலும் அமைந்துள்ள கொடியில், இரண்டு போர் யானைகளுக்கு மத்தியில் வெற்றியைக் குறிக்கும் வாகைப்பூ இடம்பெற்றிருக்கும் கொடியை விஜய் அறிமுகம் செய்தார். இந்நிகழ்ச்சியில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தலைப்பில் த.வெ.க கட்சியின் உறுதிமொழி வரிகளை நெஞ்சில் கை வைத்தபடி விஜய் வாசிக்க, நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.

தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பிறக்குது என்ற பாடல் வரிகளுடன் தொடங்கும் கொடிப் பாடலையும் விஜய் வெளியிட்டார்.

விழாவில் பேசிய விஜய், தன் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களாகிய நிர்வாகிகள் மற்றும் தமிழக மக்கள் முன்பு கட்சிக் கொடியை அறிமுகப்படுத்துவதை பெருமையாகக் கருதுவதாக தெரிவித்தார்.

மேலும், கட்சிக் கொடியின் வரலாற்று பின்னணி குறித்தும், கட்சியின் கொள்கை மற்றும் செயல் திட்டங்கள் குறித்தும் விரைவில் நடக்கவுள்ள மாநாட்டில் விளக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் எனக் கூறி தனது உரையை நிறைவு செய்த நடிகர் விஜய், விழாவில் பங்கேற்ற தனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments