“அந்த யானையை சாய்க்க இந்த தாலிச்சரடு எம் பங்குப்பா”..! ஆம்ஸ்ட்ராங் கொலையில் பொற்கொடி கைது ஏன் ?
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய தன்னுடைய பங்காக ஆற்காடு சுரேஷின் மனைவி தனது தாலிச்சரடை கழற்றிக்கொடுத்து கொலை செய்ய தூண்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இவரது கொலை தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர் ஒற்றைக்கண் ஜெயபால் மற்றும் தென் மாவட்ட கூலிப்படை கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு பழிக்கு பழிவாங்கும் விதமாக கடந்த ஜூலை 5ந்தேதி ஆற்காடு சுரேஷின் பிறந்த நாள் அன்று ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 24வது நபராக ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை பொன்னை கிராமத்தில் வைத்து போலீசார் சுற்றி வளைத்தனர்.
தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்காக தெவசம் செய்ய ஆந்திராவில் பதுங்கி இருந்த பொற்கொடி வெளியே வந்த போது போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகின்றது
ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்க அவரது காதலி என்று சொல்லப்பட்ட அஞ்சலையே 10 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், ஆற்காடு சுரேஷின் மனைவியின் பங்கு என்ன என்று விசாரித்த போது சினிமாவுக்கு நிகரான சபதம் ஒன்று தெரியவந்தது.
ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டு அவரது உடல் அடக்கம் முடிந்ததும் 16வது நாள் நிகழ்ச்சி முடிந்த கையோடு பொன்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஒன்று கூடிய உறவினர்கள் மத்தியில் “தனது கணவன் கொலைக்கு பழிக்கு பழிவாங்க வேண்டும்” என்று ஆவேசமான பொற்கொடி, தனது கணவரை கொன்றவனை பழிவாங்க தனது பங்கு என்று தனது தாலி சரடை எடுத்து வைத்ததாக கூறப்படுகின்றது.
பின்னாளில் அந்த தாலி சரடை அடமானம் வைத்து ஒன்றரை லட்சம் ரூபாயை பொன்னை பாலுவுக்கு கொடுத்ததாகவும், அதன் பின்னர் தான் பொன்னை பாலுவும் அருளும் ஒவ்வொருவரையும் சந்தித்து ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆள் சேர்த்ததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து பொற்கொடியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் சிறையில் அடைத்தனர்.
Comments