பெண்ணின் அஸ்தியில் மை கலந்து மணிக்கட்டில் "தேவதை ரெக்கை டாட்டூ".. ஊருக்குள் தூக்கமின்றி சுற்றிய திகில்... டாட்டூவை அகற்றியதால் மாணவர் நிம்மதி..!
சென்னையில் உயிரிழந்த உறவுக்கார பெண்ணின் அஸ்தியை மையில் கலந்து உடலில் தேவதையின் ரெக்கை போல டாட்டூ போட்டுக் கொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு தூக்கமின்றி தவித்த நிலையில், அந்த டாட்டூவை அகற்றிய பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது...
உடலில் எங்க வேண்டுமானாலும் விருப்பப்பட்ட உருவத்தை டாட்டூ குத்திக் கொள்ளும் வசதி வந்தாலும் வந்தது இளசுகள் செய்யும் விபரீத செயல்களுக்கு எல்லை இல்லாமல் போய்விட்டது. அந்தவகையில் சென்னையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் ஒருவர், இறந்து போன தனது உறவுக்காரக் பெண்ணின் அஸ்தியை எடுத்து வந்து மையில் கலந்து வலது கை மணிக்கட்டுக்கு பின் பக்கம் பச்சை குத்தியுள்ளார்
தேவதையின் ரெக்கை போல டாட்டூ போட்டுக் கொண்டதோடு, கல்லறையில் எழுதுவது போல அந்த பெண் மரணித்த தேதியையும் கையில் பச்சை குத்தியதாக கூறப்படுகின்றது.
அஸ்தியால் கையில் பச்சைகுத்திய பின்னர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அந்த மாணவர் தூக்கமின்றி சுற்றி உள்ளார். மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை, மாந்த்ரீக பூஜைகள் பரிகாரங்கள் செய்தும் சரியாகாமல் நாளுக்கு நாள் உடல் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. உடலில் அஸ்தியால் போடப்பட்ட டாட்டூ தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்று உறவினர்களும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் டாட்டூக்களை அகற்றும் நிபுணர் குமாரை அணுகி விவரத்தை கூறியுள்ளனர். இதையடுத்து மணிக்கட்டில் போடப்பட்ட அஸ்தி டாட்டூவை நுணுக்கமாக அழித்து அனுப்பியதாகத் தெரிவித்த குமார், தற்போது மாணவர் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
கேட்பதற்கு அமானுஷ்யமாக இருந்தாலும், உடன்வாழ்ந்தவர்கள், மனதுக்குப் பிடித்தவர்கள் இறந்துபோனால், செய்யவேண்டிய காரியங்களை முறையாகச் செய்து, ஆத்மா சாந்தியடைய செய்வதுதான் நல்லது என்று கூறும் குமார், அதை விடுத்து அஸ்தியை மையில் கலந்து டாட்டூ போடுவதால் மனரீதியாக பிரச்சனைகள் உருவாக வழிவகுத்து அதுவே உடல் நலனை கெடுத்து விடும் என்கிறார்.
Comments