ஆம்ஸ்ட்ராங் கொலையில் இளைஞர் காங். நிர்வாகி 155 ஏக்கர் நில பஞ்சாயத்து..! இத்தனை பேருடன் பகை வளர்ந்தது ஏன்?
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியும், பிரபல வட சென்னை தாதாவின் மகனுமான அஸ்வத்தாமனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பொன்னை பாலு, திமுக வழக்கறிஞர் அருள், அதிமுக வழக்கறிஞர் மலர்க்கொடி, பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியும் வட சென்னை பிரபல தாதாவின் மகனுமான அஸ்வத்தாமன் என்பவருக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரித்தனர்.
இதில் வழக்கறிஞர் அருள் மூலமாக அஸ்வத்தாமனுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பிருப்பது உறுதியானதாவும், அவரை கைது செய்திருப்பதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் சோழாவரம் அருகே மோரை கிராமத்தில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 155 ஏக்கர் நிலம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களுக்கும் , அஸ்வத்தாமனுக்கும் பிரச்சனை இருந்து வந்தது.
நில உரிமையாளர்களை மிரட்டியதாக அஸ்வத்தாமன் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கட்டுமான ஒப்பந்ததாரர் ஜெயபிரகாஷ் என்பவரை துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் அஸ்வத்தாமன் மீஞ்சூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தான் கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஸ்ட்ராங்கின் தூண்டுதலே காரணம் என்று அஸ்வத்தாமன் கருத்தியதாக கூறப்படுகின்றது. ஜாமீனில் வெளியே வந்ததும், ஆம்ஸ்ட்ராங்கை நேரில் சந்தித்த, அஸ்வத்தாமன் தன் மீதான வழக்கை வாபஸ் பெற ஆதரவாளர்களிடம் சொல்லும்படி சமாதானம் பேசியதாகவும், சிறையில் இருக்கும் தனது தந்தை நாகேந்திரனுக்கு போன் போட்டு கொடுத்து ஆம்ஸ்ட்ராங்குடன் பேச வைத்ததாகவும் கூறப்படுகின்றது.
நாகேந்திரனின் சமரசத்தை ஆம்ஸ்ட்ராங் ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே நீருபூத்த நெருப்பாக பகை வளர்ந்துள்ளது. இந்த நிலையில் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோருக்கு பண உதவி செய்ததன் மூலமாக அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பங்கிருப்பதாக கூறும் போலீசார் சிறையில் உள்ள நாகேந்திரனை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆதரவாளர்களால் அரசியல் கட்சி தலைவர் என்று அழைக்கப்படும் ஆம்ஸ்ட்ராங்கிற்கு இத்தனை பேருடன் பகையா ? என்று போலீசாரே வியந்து போயுள்ளனர். அந்த அளவிற்கு அவரது கொலைக்கு பின்னணியில் இருந்து திட்டம் வகுத்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
Comments