அதிகாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு.. தூக்கத்திலேயே உயிரிழந்த பரிதாபம்.. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி
கேரள மாநிலம் வயநாட்டு மாவட்ட நிலச்சரிவில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ராணுவம், தேசிய பேரிடர் படை என அனைத்து மீட்பு குழுக்களும் மாயமானவர்களை தேடும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டிருக்கின்றன.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பல கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
கனமழையால் சாலியார் மற்றும் அதன் துணை ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு நிலச்சரிவில் சிக்கியர்களை மீட்கும்படி முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தவிட்டுள்ளார்.
மீட்புப் பணிகளில் 200-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருவதாலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முண்டகை என்ற இடத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
நிலச்சரிவு நிலவரம் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்புகொண்டு கேட்டறிந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன் ஆகியோரிடமும் பேசிய பிரதமர் மோடி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் துரிதமாக மேற்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, காசர்கோடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. பதனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், பாலக்காடு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments