ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலி 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாக சம்போ செந்தில் சுற்றிவளைப்பு..! 15 வருடம் கழித்து சிக்கினார்?

0 800

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படைக்கு பணம் கொடுத்ததாக தேடப்பட்டு வந்த ரவுடி சம்போ செந்திலை தனிப்படை போலீசார் உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் வைத்து சுற்றி வளைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பொன்னை பாலு, வழக்கறிஞர்கள் அருள், மலர்கொடி, ஹரிகரன் , ஹரிதரன் உள்ளிட்ட 16 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலியாக 4 லட்சம் ரூபாயை ரவுடி சம்போ செந்தில் கொடுத்ததாக வழக்கறிஞர் ஹரிஹரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலைக்கு பின்னணியில் இருந்ததாக சம்போ செந்திலை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். அவர் மீது ஒரு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார்.

சம்போ செந்தில் தற்பொழுது எப்படி இருப்பார் ? என்பது தெரியாமல் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு போலீசார் தீவிரமாக தேடினர். முன்பு ஹரிஹரனை சம்போ செந்தில் தொடர்பு கொண்ட செல்போன் எண் மூலம், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பதுங்கி இருப்பதை கண்டறிந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் நொய்டா விரைந்த தனிப்படை போலீசார் சம்போ செந்திலை சுற்றிவளைத்ததாகவும், அவர் போலீஸ் பிடியில் சிக்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் இதுவரை அதிகார பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

அதே நேரத்தில் இரு தினங்களுக்கு முன்பே சம்போ செந்திலை நொய்டாவில் வைத்து போலீசார் கைது செய்து விட்டதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் ரகசிய இடத்தில் வைத்து இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments