அஞ்சலை.. யாருக்கும் அஞ்சல.. காதல்.. கஞ்சா... கந்து வட்டி.. போலீசையே வீட்டுக்குள் பூட்டியவர்..! வடசென்னை மூவி “சந்திரா” மாதிரியாம்..!

0 1237

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஞ்சலையின் வங்கிக்கணக்கில் இருந்து யார் யாருக்கு எவ்வளவும் பணம் அனுப்பபட்டுள்ளது.? என்று, போலீசார் விசாரித்து வருகின்றனர்.  வட சென்னையை கலக்கிய கந்து வட்டி அஞ்சலையின் கறார் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. 

தன்னிடம் வட்டிக்கு பணம் வாங்கிக் கொண்டு திருப்பி கொடுக்காவிட்டால்.. அஞ்சலை தரும் கொடூர ட்ரீட்மெண்ட் தான் இந்த சரமாரி தாக்குதல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்ததாக அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கை கண்காணிக்க ஆட்கள் அனுப்பும் அளவுக்கு அஞ்சலை, ஆம்ஸ்ட்ராங் மீது தீராக்கோபம் கொள்ள என்ன காரணம்? என்று விசாரித்தால் இதுவரை கொலையே செய்யாத அஞ்சலை பெண் தாதாவாக உருவான பின்னணி வியக்க வைக்கிறது.

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அஞ்சலை, இளம் வயதில் பிழைப்பு தேடி சென்னை புளியந்தோப்பு பகுதிக்கு வந்து முத்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தான் குடியிருந்த பகுதியில் கஞ்சா விற்றதால் போலீசாரால் பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். இருந்தாலும் ஒருமுறை தனது குடியிருப்பு பகுதிக்கு கஞ்சா ரெய்டுக்கு வந்த காவல் அதிகாரி ஒருவரை பெண்களுடன் வீட்டுக்குள் வைத்து பூட்டி அச்சுறுத்தியவர் என்று கூறும் போலீசார், கஞ்சா விற்பனையில் கிடைக்கும் பணத்தை ஆடுதொட்டி பகுதியில் ஆடு, மாடு வாங்கி விற்பவர்களிடம் வட்டிக்கு விட்டு நன்கு வருமானம் பார்த்ததாகவும், அப்போது அஞ்சலைக்கு ரவுடி ஆற்காடு சுரேஷோடு பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆற்காடு சுரேஷை தனது மனைவி அஞ்சலை காதலித்து வருவதை அறிந்த கணவர் முத்து அவரை பிரிந்து சென்றுள்ளார். கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷ் சிறைக்கு சென்றபோது சிறையில் ஆந்திராவை சேர்ந்த சின்னா என்கிற சின்ன கேசவலு என்ற ரவுடியோடு ஆற்காடு சுரேஷிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த ஆற்காடு சுரேஷ் அஞ்சலையோடு வீடு எடுத்து தங்கி இருந்த நிலையில், அங்கு வந்து சென்ற ரவுடி சின்னாவும் அஞ்சலையை விரும்பியதால் இருவருக்கும் இடையே பகை மூண்டுள்ளது.

அஞ்சலை யாருக்கு? என்ற போட்டியில் ஆற்காடு சுரேஷ் , ரவுடி சின்னாவை பூந்தமல்லி நீதிமன்றத்தில் வைத்து கதையை முடித்து தன்னை பெரிய ரவுடியாக காட்டிக் கொண்டதாக கூறப்படுகின்றது. ஆற்காடு சுரேஷின் பாதுகாப்புடன் அஞ்சலை கந்து வட்டி மற்றும் கஞ்சா தொழிலில் கொடிகட்டி பறந்ததோடு, தன்னை பாதுகாத்து கொள்ள பா.ஜ.கவில் இணைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பிறகு அஞ்சலையின் கந்து வட்டி தொழில் சரிந்துள்ளது. மேலும், அஞ்சலையின் கந்து வட்டியால் பாதித்தவர்களுக்கு ஆம்ஸ்ட்ராங் தலையிட்டு பணம் பெற்று கொடுத்ததால் 1.5 கோடி ரூபாய்க்கும் மேலாக அஞ்சலையின் வட்டி பணம் வெளியில் முடங்கியதாக கூறப்படுகின்றது.

ஆற்காடு சுரேஷின் மரணத்திற்கு பழி வாங்கவும், தொழிலில் ஏற்பட்ட சரிவின் காரணமாகவும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திமுக வழக்கறிஞர் அருள், பொன்னை பாலு ஆகியோருடன் அஞ்சலையும் சேர்ந்து கூட்டு சதி செய்ததாக கூறும் போலீசார், கொலை செய்ய 10 லட்சம் பணத்தையும், ஆம்ஸ்ட்ராங்கை கண்காணிக்க திருட்டு பைக்குகளையும் அஞ்சலை வாங்கி கொடுத்ததாக தெரிவித்தனர்.

மேலும் அஞ்சலை யார்.?, யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்.?, என்பதை அறியவே அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அஞ்சலை மீது 11 வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், முதல் கொலை வழக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments