கேனில் இருந்த பெட்ரோலை பாட்டிலுக்கு மாற்றும் போது ஏற்பட்ட விபரீதம்.. 7 லாரி ஓட்டுநர்களில் 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 4 பேருக்கு காயம்
கோயம்புத்தூர் சூலூர் அருகே, லாரி ஓட்டுநர் தன் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தபோது ஏற்பட்ட தீ பரவி 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், கேனில் இருந்த பெட்ரோலை சிறிய பாட்டிலுக்கு மாற்றும் போது அருகில் இருந்த கேஸ் ஸ்டவ்வில் இருந்து தீ பற்றியதாக லாரி ஓட்டுநர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை இருகூர் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்குகளில் இருந்து எரிபொருள் நிரப்ப வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் 7 பேர், முத்துக்கவுண்டன் புதூரில், அறை எடுத்து தங்கியுள்ளனர்.
நேற்றிரவு லாரி ஓட்டுநர்கள் 7 பேரும், கேஸ் ஸ்டவில் சமையல் செய்து கொண்டே ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் நிரப்புவதற்காக, பெட்ரோலை ஒரு கேனில் இருந்து மற்றொரு கேனுக்கு மாற்றியதாக சொல்லப்படுகிறது.
எளிதில் ஆவியாகும் எரிபொருள் பெட்ரோல் என்பதை, போதையில் இருந்த ஓட்டுநர்கள் மறந்து, ஒரு கேனிலிருந்து மற்றொரு கேனுக்கு, பெட்ரோலை மாற்றியபோது, கேஸ் ஸ்டவிலிருந்து தீப்பற்றி, அறை முழுவதும் நெருப்பு பரவியுள்ளது.
இந்த கோர தீ விபத்தில் லாரி ஓட்டுநர்கள் அழகுராஜா, சின்னக்கருப்பு, முத்துக்குமார் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். தீக்காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments