எத்தனை கொலை செஞ்சாலும் ஒரே தண்டனை தான் இரட்டை கொலையாளி திகில்..! நன்னடத்தை விடுதலை விபரீதம்

0 882

திருச்சி மாவட்டம் முசிறியில் தன்னுடன் வாழ மறுத்த காதலியையும், ஊரில் தனக்கு எதிராக பேசி வந்த திமுக கிளைச் செயலாளரையும் வெட்டிக் கொலை செய்த 65 வயது ஆசாமி கையில் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். நன்னடத்தை காரணமாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவரின் கொடூர செயல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.

திருச்சி மாவட்டம் ஜெகதாம்பாபுரம் காவல் நிலையத்துக்கு கையில் அரிவாளுடன் ரத்தம் தெறித்த சட்டையுடன் ஆசாமி ஒருவர் வந்தார். ஊரில் உள்ள தனது நிலத்தை ஆக்கிரமித்த திமுக கிளைச்செயலாளரை வெட்டிக் கொலை செய்ததாக தெரிவித்து அரிவாளை போலீசாரிடம் ஒப்படைத்தார்

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்த அந்த ஆசாமி 64 வயதான பாலச்சந்திரன் என்பதும், சொத்து தகராறில் உறவுக்கார பெண்ணையும் அவரது மகனையும் கொலை செய்து விட்டு 16 வருடம் சிறைத்தண்டனை பெற்று சிறையில் இருந்தவரை நன்னடத்தை காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் பாலச்சந்திரன். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் அதே ஊரில் கணவரை பிரிந்து இரு குழந்தைகளுடன் வசித்து வந்த கீதா என்ற பெண்ணுடன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

பல்வேறு வேலைகளுக்கு சென்று கீதாவுக்கு அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக விறகு அடுப்பில் சமைப்பதை தவிர்த்து கியாஸ் அடுப்பு வாங்குவதற்கு பணம் கேட்ட நிலையில், பாலசந்திரன் 1500 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். மேற்கொண்டு பணம் கொடுக்க மறுத்த நிலையில் , இனி தன் வீட்டிற்கு வரக்கூடாது என்று கீதா கறாராக கூறியதால், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகறாரில் கீதாவை அரிவளால் வெட்டிக் கொலை செய்ததாக பாலச்சந்திரன் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

அத்தோடு நிற்காமல் ஊரில் உள்ள தனது இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு பிரச்சனை கொடுத்து வந்த திமுக கிளை செயலாளர் ரமேஷ் என்பவரையும் கொலை செய்யும் திட்டத்துடன் அரிவாளுடன் அவரை தேடி வாளவந்திக்கு சென்றுள்ளார் பாலச்சந்திரன். ரமேஷ் அங்கு இல்லாததால் ஜெகதாம்புரம் வந்துள்ளார். அங்கு டீக்கடையில் அமர்ந்திருந்த ரமேஷை வெட்டிச் சாய்த்ததாக பாலச்சந்திரன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments