ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ் பெர்த் டே பேபியான வழக்கறிஞரும் கைது..! போலீஸ் வாகனத்தை மறித்த ஆதரவாளர்கள்

0 959

மாமல்லபுரத்தில் வழக்கறிஞர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார், பிறந்த நாள் கொண்டாடிய வழக்கறிஞரையும் கைது செய்ததால், அவரது ஆதரவாளர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மாமல்லபுரம் அடுத்த இலந்தோப்பு பகுதியில் உள்ள ரிசார்ட்டில் சினிமா பாணியில் ரவுடிகள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்களை அழைத்து பிறந்த நாள் கொண்டாடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகர் இவர் தான்..!

அலெக்ஸிஸ் சுதாகர் பிறந்த நாள் விழாவுக்கு , பிரபல ரவுடியும் போலீசாரால் தேடப்படுபவருமான சீர்காழி சத்யா என்பவர் ரேஞ்ரோவர் காரில் வந்திருப்பது அறிந்து அவரது காரை போலீசார் விரட்டினர். இதில் அவர் தனது காருடன் தப்பி செங்கல்பட்டு அடுத்த பழவேலி மலையடிவாரப் பகுதிக்குள் நுழைந்ததாகவும், போலீசார் அவரை சுற்றிவளைத்தபோது அவர் கத்தியால் தாக்கியதால், போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தனர்.

இதில் சீர்காழி சத்யாவின் கால் மற்றும் தோள்பட்டையில் தோட்டாக்கள் பாய்ந்தது. அவரது கூட்டாளிகளை மடக்கிய போலீசார், காயம் அடைந்த சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சீர்காழி சத்யா மீது 5 கொலை உள்ளிட்ட 32 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சில மாதங்களுக்கு முன்பு சத்யா பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை ஒரே இடத்திற்கு வரவழைத்து பிறந்த நாள் கொண்டாடிய வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகரையும் போலீசார் கைது செய்தனர். பொய்வழக்கு போட்டு கைது செய்யப்பட்டிருப்பதாக கூறி அவரது ஆதரவாளர்கள் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தினர்

வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகரை நீதிமன்றத்துக்குள் அழைத்து செல்ல விடாமல் போலீசாரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments