கள்ளச்சாராய வியாபாரிக்கு குடிக்கிற பழக்கமில்லையாம்.. மெத்தானால் விஷமானது எப்படி ? ஆந்திரா டூ கருணாபுரம் ‘டெத் ரூட்’

0 1626

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால், ஆந்திராவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து 3 பேரின் கை மாறி சாராயத்தில் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விழுப்புரம் எக்கியார்குப்பத்தில் விஷச்சாராயம் விற்று பலரது உயிரிழப்புக்கு காரணமான மதன்குமார் என்ற நபருக்கு இந்த சம்பவத்திலும் தொடர்பிருப்பதாக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தொடர்பாக சாராயவியாபாரி விஜயா, கணவர் கண்ணுகுட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது சகோதரன் தாமோதரன் , மெத்தனால் சப்ளை செய்த சின்னதுரை ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 17ம் தேதி புதுச்சேரியை சேர்ந்த மாதேஷ் என்ற நபரிடம் இருந்து சின்னதுரை மெத்தனாலை விலைக்கு வாங்கி, அதனை கோவிந்தராஜுக்கு விற்றுள்ளார் சின்னத்துரை.

60 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 ட்யூப்களிலும், 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 ட்யூப்களிலும், 100 சிறிய பாக்கெட்டுகளிலும் மெத்தனாலை சப்ளை செய்துள்ளார்.

கோவிந்தராஜனுக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்பதாலும், தனது தம்பி தாமோதரனே எப்போதும் சிறிதளவு குடித்து பார்த்து வாங்குவார் என்பதாலும் , அவரை முதலில் மெத்தனாலை குடித்து பார்க்க கூறியுள்ளார்.

ருசி பார்த்து விட்டு மெத்தனால் கெட்டுப் போய் இருப்பதாக தாமோதரன் கூறிய நிலையில், அதற்கு சின்னதுரை, “மெத்தனால் கெட்டுப்போகவில்லை, உயர் ரக சரக்கு விற்பனை செய்யுங்கள், பார்த்துக் கொள்ளலாம்” என்று விற்றுள்ளார்.

அந்த மெத்தனாலை கோவிந்தராஜ் சாராயத்தில் கலந்ததால் மலைச்சாராயம் விஷச்சாராயமானதாக கூறப்படுகின்றது.

சின்னதுரைக்கு மெத்தனாலை விற்பனை செய்த புதுச்சேரியை சேர்ந்த மாதேஷை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

ஆந்திராவில் உள்ள சில கெமிக்கல் நிறுவனங்களில் இருந்து மெத்தனாலை அவர் வாங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சின்னதுரையுடன் சேர்ந்து சாராய வியாபரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்யும் வேலையில் ஈடுபட்ட கூட்டாளிகளான மதன் குமார் மற்றும் ஜோசப் ராஜா ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் மதன்குமார் கடந்த 2023 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் தரப்பு சட்டத்தில் சிறைக்கு சென்று சமீபத்தில் வெளியே வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.


இதுவரை ஏழு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில் கல்வராயன் மலை பகுதிகளில் கள்ளச்சாராய ஊறல்களை அழிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மாதேஷ் ஆந்திராவில் எந்த நிறுவனத்திடம் இருந்து மெத்தனாலை வாங்கினார் என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments