வட சென்னை’ ஆண்ட்ரியா மாறி அடுத்தடுத்து 3 கொலைகள் ‘மர்டர் மேனகா’ சிக்கிய பின்னணி..! பேராசைக்காரிக்கு காத்திருந்த டுவிஸ்ட்

0 1466

தாம்பரம் அருகே சொத்துக்காக மாமனார், கணவரின் தம்பி, கணவர் உள்ளிட்ட 3 பேரை கொலை செய்து விட்டு , மாமியாரை கடத்தி அடைத்து வைத்த வழக்கில் 4 வருடங்களாக தேடப்பட்டு வந்த பேராசைப்பிடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்

சென்னை தாம்பரம் அடுத்த படப்பை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சுப்பராயன் - பத்மினி தம்பதியருக்கு செந்தில்குமார், ராஜ்குமார் என இரண்டு மகன்கள் இருந்தனர்.

இருவரும் திருமணமாகி மனைவிகளுடன் வசித்து வந்த நிலையில் சுப்பராயன் தனது சொத்துக்களை இருமகன்களுக்கும் சரிசமமாக பகிர்ந்து அளித்தார்.

இதில் இளையமகன் ராஜ்குமாருக்கு வழங்கிய சொத்து படப்பை பிரதான சாலையில் இருந்ததால் அதிக விலை மதிப்புடன் இருந்ததாக கூறப்படுகின்றது.

அதனை கண்டு செந்தில்குமாரும் அவரது மனைவி மேனகாவும் பொறாமை கொண்டு சண்டையிட்டனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தம்பி ராஜ்குமாரை கொலை செய்த வழக்கில் செந்தில் குமார் கைது செய்யப்படு சிறையில் அடைக்கப்பட்டார்.

கணவன் செந்தில்குமார் ஜெயிலுக்கு சென்ற பின்னர் மேனகா, அவரது நண்பர் ராஜேஸ்கண்ணாவுடன் நெருக்கமானதாக கூறப்படுகின்றது.

சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் குமாரிடம் மேனகா , ராஜேஷ் கண்ணாவுடன் நெருங்கி பழகுவதாக உறவினர்கள் தெரிவித்த நிலையில், கணவர் கண்டித்ததாக கூறப்படுகின்றது. அதன் பின் சில தினங்களில் செந்தில்குமார் மாயமானார்.

அவர் காணாமல் போன சில தினங்களில் மாமனார் சுப்பராயனை காதலனின் கூட்டாளிகளை ஏவி மேனகா கதையை முடித்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் செந்தில்குமாரின் தாய் ருக்மணி தனது மகனை காணவில்லை என்று நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

செந்தில்குமாரை கண்டு பிடிக்க மணிமங்கலம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் காதலுக்கு குறுக்கே நின்றதால் கணவருக்கு மது வாங்கிக் கொடுத்து கொலை செய்து செஞ்சியில் புதைத்தது தெரியவந்தது.

செந்தில்குமார் சடலத்தை தோண்டி எடுத்தனர். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மாமியார் ருக்மிணி கடத்தப்பட்டார்.

அவர் பயன் படுத்திய செல்போன் நம்பர் மூலம் துப்புதுலக்கிய போலீசார் சென்னை அயனாவரம் பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவரை பத்திரமாக மீட்டனர்.

சொத்துக்களை எழுதி வாங்கும் திட்டத்துடன் 2 நாட்கள் அவகாசம் கொடுத்து அவரை ஒரு வீட்டில் மேனகா அடைத்து வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வட சென்னை படத்தில் வரும் ஆண்ட்ரியா கதாபாத்திரம் போல, 3 கொலைகளுக்கும் மாமியார் கடத்தலுக்கும் காரண கர்த்தாவான மேனகா தலைமறைவாகிவிட்டார்.

கடந்த 4 வருடங்களாக அவரை தேடி வந்த நிலையில் சித்தாலப்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டிற்கு தனது குழந்தைகளை பார்ப்பதற்காக வந்த மேனகாவை போலீசார் கைது செய்தனர்.

தங்களுக்கு கிடைத்த சொத்தை வைத்து திருப்தியாக வாழாமல் பொறாமையால் கொலைக்கு மேல் கொலைகள் செய்து எந்த ஒரு சொத்துக்களையும் அனுபவிக்க இயலாமல் சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் மேனகா என்கின்றனர் போலீசார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments