நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் 4 பேர் உட்பட மொத்தம் 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

0 807

நாடாளுமன்ற பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டதாக தி.மு.க.வின் கனிமொழி, காங்கிரசின் ஜோதிமணி உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மக்களவை காலை கூடியதும் நாடாளுமன்றத்தில் இருவர் நுழைந்து கலர் புகை குப்பி வீசியது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் விளக்கம் அளித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு குறைபாடு பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என்றார்.

பார்வையாளர் அனுமதி அட்டை கொடுக்கும்போது எம்.பி.கள் கவனமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அமளி நீடித்ததால் ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் கூடிய போது அமித் ஷா பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.

இதனையடுத்து ஜோதிமணி உட்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது

மக்களவை பிற்பகல் 2 மணிக்கு கூடியபோதும் அமளி நீடித்ததால் திமுக எம்.பி., கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உட்பட மேலும் 8 பேரை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதே போன்று, மாநிலங்களவையில் அவைத் தலைவர் இருக்கை அருகே சென்று அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையனும் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments