பிடித்த நகைகளை தேர்வு செய்து எடுத்துச் சென்ற கொள்ளையன்..! 200 சவரனுடன் தப்பியவனை முழுவீச்சில் தேடும் போலீசார்..!!

0 2405

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் புகுந்து, ஷாப்பிங் செய்வதைப் போல நின்று நிதானமாக தனக்குப் பிடித்த சுமார் 200 சவரன் நகைகளை தேர்வு செய்து எடுத்துச் சென்ற மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை 100 அடி சாலையில் உள்ளது, ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை. இந்த கடைக்கும் அதற்கு வலது பக்கத்தில் உள்ள மற்றொரு கட்டடத்துக்கும் இடையே சிறிய சந்து ஒன்றுக்கு உள்ளது. ஒல்லியான நபர் மட்டுமே நுழையக் கூடிய இந்த சந்தின் வழியாக நள்ளிரவு நேரத்தில் மேலே ஏறிய மர்ம நபர் ஒருவர், முதல் தளத்தில் உள்ள குளிர்சாதன கருவி வெண்ட் வழியாக நகைக் கடைக்குள் புகுந்திருக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடைக்குள் சென்றதும் கையில் பட்டதையெல்லாம் அள்ளாமல், ஒவ்வொரு கவுண்ட்டராக சென்று தனக்குப் பிடித்த வளையல், கம்மல், ஜிமிக்கி, சங்கிலி போன்ற நகைகளை மட்டும் மர்ம நபர் தேர்வு செய்து எடுத்துச் சென்றிருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

சுமார் 200 சவரன் நகைகளை கொள்ளையைடித்த பின், தனது முகத்தில் அணிந்திருந்த மாஸ்க், சட்டை ஆகியவற்றை நகைக் கடைக்கு வெளியிலேயே கழற்றிப் போட்டுவிட்டு மர்ம நபர் தப்பிச் சென்றதாக கூறியுள்ள போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட நபர் வழக்கமான திருடன் அல்ல என்றும் புதிய நபராக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், 5 தனிப்படைகளை அமைத்து மர்ம நபரை தேடி வருவதாகவும் கூறியுள்ளனர்.

நகைக் கடையின் இடது புறத்தில் புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதில் பணியாற்றுபவர்களிடமும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments