மீண்டும் ஒரு ராகிங் புகார்..! ஜுனியரை தாக்கிய 2 சீனியர்கள் ..!

0 1854

கோவை மாவட்டத்தில் மீண்டும் ஒரு தனியார் கல்லூரி மீது ராகிங் புகார் எழுந்துள்ளது. சூலூரில் உள்ள  தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்து தாக்கியதாக சீனியர் மாணவர்கள் இருவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூலூர் குமரன் கோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆர்.வி.எஸ். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கட்ரானிக்ஸ் பொறியியல் படித்து வருபவர், சேலத்தைச் சேர்ந்த அகிலேஷ். அதே கல்லூரியில் அவரது பாடப்பிரிவில் படிக்கும் 12 மாணவர்களும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

கடந்த புதனன்று, அதே கல்லூரியில் படிக்கும் நான்காம் ஆண்டு படிக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த முத்து குமார் மற்றும் கரூரை சேர்ந்த கோகுல் ஆகியோர் அகிலேஷ் உள்ளிட்டோரின் விடுதி அறைக்கு
வந்ததாக கூறப்படுகிறது. கல்லூரிக்குள் காப்பு கயிறு கட்டக்கூடாது, முழுக்கை சட்டை அணிந்து டக்கின் செய்திருக்க வேண்டும், சீனியர் முன்பாக கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது, சீனியர் வந்தால் மரியாதை செலுத்த வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை ஜூனியர்களிடம் அடுக்கியதாக தெரிகிறது.

இதை ஆட்சேபித்து அகிலேஷ் விடுதி அறையில் இருந்து வெளியே சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள் 2 பேரும், அகிலேஷ் மற்றும் அவரது அறையில் உள்ள 12 மாணவர்களையும் கல்லூரி முடிந்த பின்பு சூலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வெங்கடேஷ் என்ற மாணவனின் அறைக்கு வருமாறு சொன்னதாக கூறப்படுகிறது. சீனியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று கருதி அங்கு சென்ற மாணவர்களில் அகிலேஷைத் தவிர மற்ற 12 மாணவர்களையும் கோகுல் மற்றும் முத்துக்குமார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

அகிலேஷை மட்டும் தங்கள் இருசக்கர வாகனத்தில் ஏற்றுக் கொண்ட முத்துக்குமார் மற்றும் கோகுல், சூலூர் டீக்கடை ஒன்றில் வேலை செய்து வரும் தனபால் என்பவரின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மூவரும் இணைந்து தகாத வார்த்தையால் திட்டி, அடித்து அகிலேஷின் கைக்கடிகாரம், செல்போன் போன்றவற்றை பிடுங்கிக் கொண்டதாக அகிலேஷின் சகோதரர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

புகாரின் பேரில் சூலூர் காவல் துறையினர் ராகிங் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் முத்துக்குமார், கோகுல் மற்றும் தனபால் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதில் மாணவர்கள் இருவரையும் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்த போலீசார், டீக்கடைக்காரர் தனபாலை மட்டும் சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலோசித்து மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை கடந்த சில தினங்களுக்கு முன்பு பீளமேடு பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் இரண்டாம் ஆண்டு மாணவரை மொட்டை அடித்து தாக்குதல் நடத்தி ராகிங் செய்த சம்பவம் அரங்கேறிய நிலையில், தற்போது மேலும் ஒரு தனியார் கல்லூரியில் ராகிங் நடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments