10 வருடமாக குழந்தை இல்லை.. மந்திரவாதி செய்த விபரீத செயல்.. 5 சவரன் தாலி சங்கிலிக்காக கொலை..! அருள்வாக்கு பூசாரி சிக்கிய பின்னணி

0 1727

சேலம் அருகே 10 வருடம் குழந்தை இல்லாமல் தவித்த பெண் ஒருவர், குழந்தை வரம் தருவதாக கூறிய பூசாரி நம்பிச்சென்றபோது மாயமான நிலையில், அந்த பெண்ணுக்கு  குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததோடு, கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலிச் சங்கிலியை பறித்ததாக பூசாரியை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே சேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பசவராஜ். இவருக்கும் செல்வி என்பவருக்கும் கடந்த10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இவர்களுக்கு குழந்தை பிறக்காத நிலையில், செல்வி பல்வேறு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தும், பல்வேறு கோயில்களில் பரிகாரம் செய்தும் குழந்தை வரம்பெற முயற்சி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 15 ந்தேதி சேலம் அருகே இளம்பிள்ளையை அடுத்த திருமலைகிரி பாறைக்காட்டூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு குழந்தை வரம் வேண்டி சென்ற செல்வி வீடு திரும்பாமல் மாயமானார்.

அடிக்கடி வேலை விஷயமாக பெங்களூர் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்த செல்வியின் கணவர் பசவராஜ் குறி கேட்கச்சென்ற தனது மனைவியை காணவில்லை என்று தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையை முன்னெடுத்த போலீசார் திருமலைகிரி பாறை காட்டூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகே சடலமாக கிடந்த செல்வியின் உடலை மீட்டனர். அருகில் இருந்து விஷம் கலந்த குளிர்பான பாட்டிலை கைப்பற்றி அவர் தற்கொலை செய்து கொண்டாரா ?அல்லது அவரை யாரேனும் கொலை செய்தார்களா ? என தீவிர விசாரணை நடத்தினர்.

செல்வி கடைசியாக பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பூசாரியான குமார் என்பவருடன் பேசியது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, குழந்தை வரம் பெற குறிகேட்டு வந்த செல்விக்கு நேர்ந்த விபரீத முடிவு வெளிச்சத்துக்கு வந்தது.

கடந்த 3 வருடங்களாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்த செல்விக்கு, பூசாரி குமாருடன் பணத்தை கொடுத்து வாங்கும் அளவுக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் பூசாரி செல்வியிடம் 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து தனது காதலி போல வைத்திருந்துள்ளார்.

ஆனால் செல்வி அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு நபருடன் நெருங்கி பழகியதால் பணத்தை திருப்பி கேட்டுள்ளார் பூசாரி குமார். பணம் கொடுக்க மறுத்த செல்வியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலி சங்கிலியை அபகரிக்க திட்டமிட்ட பூசாரி கடந்த 15 ந்தேதி கோவிலில் வைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை செல்விக்கு கொடுத்துள்ளார்.

அதனை குடித்த சிறிது நேரத்தில் செல்வி அங்கேயே சுருண்டு விழுந்து பலியான நிலையில் அவரது கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலியை எடுத்துக் கொண்டு குமார் கம்பி நீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பூசாரி குமாரை கைது செய்த போலீசார் தாலி சங்கிலியை கைப்பற்றினர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மகப்பேறு வேண்டி இது போன்ற அருள்வாக்கு ஆசாமிகளை நம்பிச்செல்லும் பெண்கள் உஷாராக இல்லாவிட்டால் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments