அண்ணனின் 35,000 ரூபாய் திருட்டு 6 வயது அண்ணன் மகனுக்கு விஷம் கலந்த டிபன் பாக்ஸ்... தன் வினை தன்னையே சுட்டது

0 2632

எழுதப்படிக்க தெரியாத அண்ணனிடம் 35 ஆயிரம் ரூபாய் திருடியதை திசை திருப்புவதற்காக அவரது 6 வயது மகனுக்கு பள்ளிக்கே சென்று விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்ய முயன்றவர், தனது குட்டு வெளிப்பட்டதால் மீதமிருந்த விஷத்தை குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் காவனூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார் அதேப் பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரத்தின் 6 வயது மகன் குருதேவ். பள்ளியில் வைத்து மதிய உணவு சாப்பிட்ட போது மயங்கி விழுந்ததாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் குருதேவ்.

மதிய உணவு இடைவேளையின்போது சிறுவன் டிபன் பாக்ஸை திறந்து சாப்பிட்ட போது, கசப்பாக இருப்பதாகவும் துர்நாற்றம் விசுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கும் போதே மயக்கமடைந்து கீழே விழுந்தான் சிறுவன்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டான் சிறுவன். உணவை யார் கொண்டு வந்தார்கள் என்ற விசாரணையில் இறங்கிய போது, பாலசுந்தரத்திற்கு தம்பி உறவு முறை கொண்ட கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான மணிகண்டன் என்பது தெரிய வந்தது.

மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில் பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை உணவில் கலந்து அந்த டிபன்பாக்ஸை சிறுவனிடம் கொடுத்ததும் தெரிய வந்தது.

போலீஸாரின் விசாரணையில், கடந்த மாதம் பாலசுந்தரத்தின் வீட்டிலிருந்த ஏ.டி.எம்., கார்டை எடுத்துச் சென்ற மணிகண்டன் அவருக்கு தெரியாமல் 35 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக கூறப்படுகிறது. விவசாய தேவைக்காக பணம் எடுக்க வங்கிக்கு சென்ற போது கணக்கில் பணம் இல்லையென வங்கி நிர்வாகம் தெரிவித்ததால் சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பாலசுந்தரம்.

பணம் திருடப்பட்டதை போலீஸார் கண்டுபிடித்து விடுவார்கள் என பயந்த மணிகண்டன் அதனை திசை திருப்புவதற்காக பாலசுந்தரத்தின் மகனை கொலை செய்ய முடிவெடுத்து விஷம் கலந்த உணவை வழங்கியது தெரிய வந்தது. திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்கில் தான் கைது செய்யப்பட்டு விடுவோம் என பயந்து மீதமிருந்த பூச்சி மருந்தை குடித்து வீட்டிலேயே மணிகண்டன் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவித்தனர் போலீஸார்.

திருட்டு, திருட்டை மறைக்க கொலை என இறங்கி இறுதியில் தனது உயிரையே இளைஞர் மாய்த்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments