நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 70-வது பிறந்தநாள் குழந்தை நட்சத்திரம் முதல் உலகநாயகன் வரை..

0 3059

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 70-வது பிறந்தநாள். குழந்தை நட்சத்திரமாக நடிப்புலகில் காலடி எடுத்து வைத்து, பின்னர் உலகநாயகனாக விசுவரூபம் எடுத்த கலைஞனைப் பற்றிய ஓர் செய்தித் தொகுப்பு...

63 ஆண்டுகளுக்கு முன் வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் பின்னாளில் தமது நடிப்பால் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்குச் செல்வார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, வானம்பாடி, ஆனந்த ஜோதி போன்ற படங்களில் நடித்து எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி போன்றவர்களின் அன்புக்கும் அரவணைப்புக்கும் பாத்திரமானவர் அவர்.

அரங்கேற்றம் படத்தில் கமலுக்கு வாய்ப்புக் கொடுத்த கே.பாலச்சந்தர் அவரது நடிப்பில் திருப்தியடைந்து, தெலுங்கு, இந்தி உள்பட அவர் இயக்கிய படங்களில் 28 படங்களில் நடிக்கச் செய்தார்.

ரஜினியின் முதல்படமான அபூர்வ ராகங்களில் கதாநாயகனாக நடித்தவர் கமல்ஹாசன். 1970 களில் ரஜினியும்- கமலும் நடித்த பல்வேறு படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.

நடிகனாக கமல் மேற்கொண்ட புதிய முயற்சிகள், தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கும் பெயர்பெற்றுத் தந்தது.16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மகாநதி, தேவர் மகன், விருமாண்டி, தசாவதாரம் என விதவிதமான பாத்திரங்களில் கமலின் நடிப்பைப் பட்டியலிடுவது கடினம்.

உதவி நடன மாஸ்டர், உதவி இயக்குநர், கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இயக்குநர், நடிகர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என திரையுலகின் அனைத்து துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சகலகலாவல்லவனாக வலம் வந்தவர் கமல்ஹாசன்.

சிறுவயதிலேயே முறைப்படி நடனம் கற்றுக் கொண்ட கமல் பல படங்களில் தனது நடனத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இளையராஜா தொடங்கி தற்போது வரை பலரது இசையமைப்பில் பாடல்களைப் பாடியுள்ளார் கமல்.

கமலுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது. பிரான்ஸ் அரசின் செவாலியே விருது உள்பட எண்ணற்ற விருதுக்கு சொந்தக்காரர் கமல். நான்கு முறை தேசிய விருதுகளையும், 17 முறை பிலிம்ஃபேர் விருதையும் பெற்றவர் அவர். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளாலும் கவுரவிக்கப்பட்டார்.

234 படங்களில் நடித்தபோதும், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தாலும் விடாமுயற்சியாலும் இன்னும் கலைத்துறையில் துடிப்போடு நிற்கும் கமலுக்கு நிகர் கமல்தான் என்றால் அது மிகையல்ல.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments