கடந்த 10 ஆண்டுகளில் முன்னேறுவதற்கு எதிரான தடைகளை இந்தியா தகர்த்து இருப்பதாக பிரதமர் மோடி கருத்து

கடந்த 10 ஆண்டுகளில் முன்னேறுவதற்கு எதிரான தடைகளை தகர்த்து வளர்ந்த நாடாக மாறும் பாதையில் இந்தியா உறுதியாக நடை போட்டுக் கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றின் தலைமைத்துவ உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர், ஒரு காலத்தில் இந்த நாட்டில் எதுவும் நேரத்துக்கு நடக்காது, ஊழல் ஒழியாது, அரசு திட்டங்கள் தரமாக இருக்காது என்ற மனநிலையுடன் மக்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
அது தற்போது மாறி ஏழைகள் முதல் பணக்கார முதலீட்டாளர்கள் வரை இது இந்தியாவின் நேரம் என்று நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார். சுதந்திர போராட்டத்தின் போது மகாத்மா காந்தி ஒரு கைப்பிடி உப்பை அள்ளிய போது எந்தளவுக்கு தேசத்தில் எழுச்சி இருந்ததோ, அதே அளவுக்கு தற்போது சந்திரயான் திட்ட வெற்றிக்குப் பின் 140 கோடி மக்களிடையே எழுச்சி காணப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
2014-க்குப் பின் பல்வேறு தடைகளை உடைத்து முன்னேறி வரும் இந்தியா, இத்துடன் நிற்காது என்றும், நட்சத்திரங்களைத் தாண்டி புதிய உலகுகளை வெல்லும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Comments