சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. மக்களின் தளபதி நான்...! யானையை அடிக்க முயற்சிப்பது தான் வெற்றியாம்

0 3015

சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர் தான் என்று லியோ படத்தின் வெற்றி விழாவில் சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய், மக்கள் தான் மன்னர்கள், மக்கள் சொல்வதை செய்யும் தளபதி நான், ஆணையிடுங்கள் அதை செய்கிறேன் என்று தெரிவித்தார்..

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், சமூக வலைதளங்களில் ஏன் இவ்வளவு கோபம், நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம் என்று கூறி ரசிகர்களுக்கு குட்டிக்கதை ஒன்றை கூறினார்.

காட்டுக்கு 2 பேர் வேட்டைக்கு போறாங்க அங்கு மான், முயல், காக்கா, கழுகு என்று கூறியதும் ரசிகர்கள் கூச்சலால் அரங்கம் அதிர்ந்தது. காடு என்றால் எல்லாம் இருக்கும் தானே அதற்கு சொன்னேன் ...என்று கதையை தொடர்ந்த விஜய், வில் அம்பு கொண்டு போனவர்களில் ஒருவர் முயலை அடிச்சிட்டார், மற்றொருவர் யானையை அடிக்க முயற்சி செய்தார் முடியவில்லை இதில் யார் அச்சீவர்... நம்மால் எதை ஈசியாக ஜெயிக்க முடியுமோ அது வெற்றி இல்லை.. நம்மால் ஈசியாக ஜெயிக்கவே முடியாததை வீழ்த்த முயற்சிப்பது தான் வெற்றி. பெரியதாக லட்சியம் கொள்ளுங்கள் பாரதியார் சொன்னது போல பெரிதினும் பெரிது கேள் என்றார்.

ஒரு மகன் அப்பாவின் சட்டையை போடுவதற்கும், வாட்சை கட்டுவதற்கும், அவரது இருக்கையில் அமர்வதற்கும் எல்லாம் தகுதி தேவை இல்லை, தன் அப்பாவின் இடத்திற்கு வர அவன் நினைக்கிறான் அவ்வளவு தான் என்ற விஜய், லியோ பாடலின் இரு வரிகள் பிரச்சனை ஆனதை குறிப்பிட்டார், விரல் இடுக்கில் தீப்பந்தம் என்று சிகரெட்டை நினைக்காதீர்கள் ... ஏன் அது பேனாவாக இருக்க கூடாது ? என்று மழுப்பி சொல்லிவிட்டு நான் போக விரும்பவில்லை என்றும் சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்றார்

நம் வாழ்வில் பல்வேறு தீய விசயங்கள் உள்ளன- நல்லதை மட்டும் தேர்வு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்ட விஜய், பள்ளிக்கு போகிற வழியில் கூட தான் டாஸ்மாக் இருக்கு, அங்கு ரவுண்டு அடிச்சிட்டா போறாங்கா..? அதனை கடந்து தானே போகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ் சினிமா நமக்கு கொடுத்துள்ள நட்சத்திர நாயகர்கள் என்று பட்டியலிட்ட விஜய், புரட்சித்தலைவர் என்றால் ஒருவர் தான், நடிகர் திலகம் என்றால் ஒருவர் தான், கேப்டன் என்றால் ஒருவர் தான், உலக நாயகன் என்றால் ஒருவர் தான், சூப்பர்ஸ்டார் என்றால் ஒருவர் தான், தல என்றால் ஒருவர் தான்.... தளபதி என்பவர் மன்னர்கள் ஆணையிடுவதை அப்படியே செய்பவர்கள் என்ற விஜய் , மக்களாகிய நீங்கள் தான் மன்னர்கள். நீங்கள் சொல்வதை செய்யும் தளபதி நான், நீங்கள் ஆணையிடுங்கள் அதை செய்து விட்டு போகிறேன் என்று ரசிகர்களின் ஆரவாரத்துக்கிடையே சொல்லி முடித்தார்.

கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், தன்னுடைய அமைச்சரவையில் லோகேஷ் கனகராஜுக்கு ,போதைப்பொருள் மற்றும் தடுப்புச்சட்டத்துறை என்ற புது இலாக்கா ஒன்றை கொடுப்பேன் என்றார். கற்பனையாக கேட்டதால் கற்பனையாக சொன்ன பதில் இது என்ற விஜய், இது முற்றிலும் கற்பனையே என்றதோடு 2026 தேர்தலில் கப்பு முக்கியம் பிகிலே என்றதும் ரசிகர்கள் பலத்த கரவொலி எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments