பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம்.. பெற்ற தாயே குழந்தையைக் கொன்று நாடகம் ஆடியது விசாரணையில் அம்பலம்..!

0 5123

தேனி மாவட்டம் கம்பத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவத்தில், பெற்ற தாயே குழந்தையைக் கொன்று நாடகம் ஆடியது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த மணிகண்டன் - சினேகா தம்பதியினருக்கு கடந்த 25 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் பிரசவத்திற்காக கம்பத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற சினேகா குழந்தை பிறந்த பிறகும் அங்கேயே தங்கி இருந்து வருகிறார்.

கடந்த 22-ஆம் தேதி பெற்றோர் வேலைக்குச் சென்று விட்ட நிலையில்,சினேகா மற்றும் அவரது பாட்டி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது பாட்டி அருகே உள்ள கடைக்கு சென்று விட, தாம் குளிப்பதற்காக சென்றதாகவும், திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை என்றும் சினேகா கூறியுள்ளார்.

இதனை அடுத்து காணாமல் போன குழந்தையை பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய சோதனையில் வீட்டில் இருந்த பால்கேன் ஒன்றில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாயிடம் நடைபெற்ற விசாரணையில் குழந்தையை தண்ணீரில் மூழ்கவைத்து கொன்றது தாம் தான் என சினேகா ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தையை பராமரிப்பது சிரமமாக உள்ளதாகவும், கணவருக்கு வலிப்பு நோய்க்காக தொடர்ந்து மருத்துவம் தொடர்ந்து பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார் சினேகா.

மருத்துவம் மற்றும் குழந்தையை பராமரிக்கும் செலவால் குடும்பத்தில் வறுமை அதிகளவில் ஏற்படுவதாகவும் தொடர்ந்து குழந்தை வீட்டில் அழுது கொண்டே இருந்ததால் எரிச்சல் அடைந்ததாகவும் இதன் காரணமாக ஏற்பட்ட தொடர் மனஅழுத்தத்தின் காரணத்தால் குழந்தையை கேனுக்குள் முக்கி சினேகா கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments