வீட்டை சுற்றி 180 சவரன் நகைகளை புதைத்த கொள்ளைக்கார குடும்பம்..! மண் வெட்டியால் தோண்டி மீட்பு

0 4117

மதுரை அருகே 20க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடித்த 180 சவரன் நகைகளை, வீட்டைச் சுற்றி புதைத்து வைத்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சாதாரணமாக ஊருக்குள் சுற்றிவந்த களவாணிகளை தட்டித்தூக்கிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

மண்வெட்டிய எடுத்து வெட்டுவது மரத்துக்கு உரம் வைக்க அல்ல... மண்ணுக்குள் புதைத்துவைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்பதற்கு..!

மதுரை மாவட்டம் சிலைமான், கருப்பாயூரணி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளாக பூட்டப்பட்ட வீடுகளை குறிவைத்து இரவு நேரத்தில் புகுந்து வீடுகளில் உள்ள பீரோக்களை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக 20 க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசாரிடம் அளிக்கப்பட்டிருந்தன.

ஒரே மாதிரியாக நிகழ்ந்த இந்த கொள்ளை வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஊமச்சிகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் , சிலைமான் காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

கொள்ளை நடந்த இடங்களில் எல்லாம் பார்ப்பதற்கு அப்பாவிகள் போல வயதான பெண் ஒருவருடன் மூன்று இளைஞர்கள் சுற்றியது தெரியவந்துள்ளது. விசாரணையில் இந்த கும்பலானது புதன்கிழமை கல்மேடு பகுதியில் வழியாகச் சென்றதும் கல்மேடு பகுதியில் மீண்டும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட உள்ளதாகவும், அதற்கான ஆயுதங்களுடன் சென்றுள்ளதும் தனிப்படை காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து கல்மேடு சந்திப்பு பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

கூலித்தொழிலாளிகள் போல வந்த இரு இளைஞர்களும் சில ஆயுதங்கள் மற்றும் கையுறை ஆகியவற்றை மறைத்திருப்பது தெரியவந்தது.

காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் இருவரும் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் இளமனூர்புதூரைச் சேர்ந்த சின்னசாமி என்ற நரி மற்றும் சோனைச்சாமி என்றும் சகோதரர்களான இருவரும், அண்ணன் பெரியகருப்பசாமி , தாயார் ஆசை பொண்ணு ஆகியோர் குடும்பாக சேர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது

நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர், வீட்டில் சென்று நகைகளை பறிமுதல் செய்ய சென்றபோது அங்கு நகைகள் இல்லை, போலீசாரின் சிறப்பான கவனிப்பில் அந்த கொள்ளைக்கார குடும்பம், கொள்ளையடித்த நகைகளை வீட்டை சுற்றியும் புதைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து மண்வெட்டியால் தோண்டி எடுத்தனர்

வீட்டை சுற்றி புதைத்து வைத்திருந்த 180 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஒன்பது லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

மொத்தமாக 240 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்ததும் அந்த நகைகளையும், பணத்தையும் பயன்படுத்தி வீடு மற்றும் வாகனங்கள் வாங்கியதும் தெரியவந்துள்ள நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட வீடு மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments