வெளியேறிய 400000 பேர்! துவங்கிய தரைவழி 'ரெய்டு'..! இது தான் ஆரம்பம்..!

0 2153

இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து காஸாவின் வடக்குப் பகுதியில் இருந்து இதுவரை 4 லட்சம் பேர் அடித்துப் பிடித்து வெளியேறி இருப்பதாக ஐ.நா கூறியுள்ளது. இரவு பகலாக குண்டுகள் வீசப்பட்டு வரும் நிலையில், தாங்கள் இதுவரை நடத்தியுள்ள தாக்குதல் வெறும் ஆரம்பம் தான் என்று எச்சரித்துள்ளார் இஸ்ரேலிய பிரதமர் நேத்தன்யாஹு.

எம் அம்பு கடிவிடுதும்.. நும் அரண் சேர்மின்.. என இஸ்ரேல் விடுத்த 24 மணி நேர கெடுவால் களேபரமாகி இருக்கிறது, வடக்கு காசா! "நாம் ஏன் நம் வீடுகளை விட்டு செல்ல வேண்டும், இங்கேயே இருப்போம்" என்று ஹமாஸ் எவ்வளவு கதறியும் கேட்காமல் இதுவரை 4 லட்சம் பேர் தெற்கு நோக்கி புலம்பெயர்ந்து இருப்பதாக ஐ.நா. கூறியுள்ளது.

காஸாவில் இதுவரை ஆயிரத்து 900 பேர் உயிரிழந்துவிட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டுவிட்டு சென்றவர்களால் வடக்கு காசாவில் பல்வேறு தெருக்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இதற்கு பதிலடியாக வடக்கு இஸ்ரேலை நோக்கி சரமாரியாக ராக்கெட்டுகளை வீசியது ஹமாஸ். மறுபுறம், காஸாவுக்குள் ரெய்டு சென்ற இஸ்ரேல் ராணுவத்தினர், ஹமாஸ் பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களின் சடலங்களை அதிரடியாக மீட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கவச வாகனங்களுடன் நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் போது ஹமாஸின் ஒரு முகாம் அழிக்கப்பட்டதாகவும், ராக்கெட் வீச்சு நடத்தி ஹமாஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரை கொன்றதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் வெறும் ஆரம்பம் மட்டுமே என்று கூறியுள்ள அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹு, இதுவரை இல்லாத அளவுக்கு பலத்துடன் தங்கள் எதிரிகளை தாக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சர்தேச நாடுகளின் ஆதரவை திரட்டி வருவதாகவும் நேத்தன்யாஹு கூறியுள்ளார்.

ஆனால் காஸா போரில் தாங்கள் தலையிடுவதை வல்லரசு நாடுகள், ஐ.நா., அரபு நாடுகள் என யாராலும் தடுக்க முடியாது என்று லெபனானை மையமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பில் துணைத் தலைவர் நயீம் காஸிம் பிரகடணப்படுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இஸ்ரேல்-லெபனான் எல்லையில் வசிப்போர் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் கதவு ஜன்னல்களை திறக்க வேண்டாம் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா படையினர் இணைந்து தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதற்கு தாங்கள் பதிலடி தந்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் சர்வதேச செய்தி நிறுவன நிருபர் ஒருவர் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments