அவரை கொலை செய்ய ரூ 25 லட்சம் கூலியாம் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி..! அதிரும் அரசியல் பின்னணி

0 3117

செங்கல்பட்டு மாவட்டத்தில் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி தணிகா,  25 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அரசியல் பிரபலம் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக  தகவல் வெளியாகி உள்ளது

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் தணிகா என்ற தணிகாசலம். போலீசாரின் ஏ பிளஸ் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர் மீது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தது உள்ளிட்ட 8 கொலை வழக்குகள் உள்பட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொள்ளை வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்த தணிகாவை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததால், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. தணிகா சென்னையில் நடமாடி வருவதை கண்டுபிடித்த தனிப்படையினர் அவரை
கைது செய்து செங்கல்பட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து சித்தாமூர் காவல் நிலையத்திற்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற போது மாமண்டூர் பகுதியில் போலீஸாரை தாக்கி விட்டு தணிகா தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, போலீஸார் துப்பாக்கியால் 2 ரவுண்டு சுட்டதில் தணிகாசலத்தின் வலது கால் மற்றும் கையில் குண்டு பாய்ந்தது.

மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், ரவுடி தணிகாசலம் மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளதாக படாளம் போலீஸார் தெரிவித்தனர்

ரவுடி தணிகாசலம், மறைந்த தாதா காஞ்சிபுரம் ஸ்ரீதரின் வலதுகரமாக இருந்து செயல்பட்டு வந்ததாகவும், சென்னை அருகே சோழவரத்தில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகள் முத்துசரவணன், சண்டே சதீஸ் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை வழக்கு பிடிவாரண்ட்டில் தணிகா கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், சென்னையில் முக்கிய அரசியல் பிரமுகரை கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக 25 லட்ச ரூபாய் கைமாறியதன் பின்னணியிலேயே அவர் பிடிபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காகவே, சென்னைக்கு வந்த தணிகா, கெபிஅருண் என்ற ரவுடியுடன் சேர்ந்து அந்த அரசியல் பிரமுகரை கொலை செய்வதற்கு கூலிப்படையாக செயல்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்

திருவாரூர் மாவட்ட தி.மு.க பிரமுகர் பூண்டி கலைவாணன், கன்னிகைப்பேர் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் திராவிட பாலு, கே.கே.நகர் விஸ்வநாதன் மற்றும் மடிப்பாக்கம் செல்வம் ஆகியோர் கொலை வழக்குகளில் தணிகாவின் பெயர் இடம் பெற்று உள்ளதாகவும், மீண்டும் ஒரு அரசியல் கொலைக்கு திட்டமிட்டிருந்த நிலையில் ரவுடி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ரவுடி தணிகாவை கூலிக்கு ஏவிய நபர்கள் மீதும் காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments