நிர்மலா சீதாராமன் விழாவில் கோஷமிட்ட நபரின் பின்னணி வங்கி அனுப்பிய கடிதத்தால் அம்பலம்..!

0 12381

கோவை கொடிசியா அரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற 3,749 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கும் விழாவில், தனக்கு கடன் தரவில்லை என்று கையை உயர்த்தி கோஷமிட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. கோஷமிட்டவரை மேடைக்கு வரவழைத்து அவரது குறையை மைக்கில் பேசும்படி கூறி, தகுதி இருந்தால் கடன் தரச்சொல்வதாக அமைச்சர் உறுதி அளித்தார்

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து பிரதம மந்திரியின் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் 3,749 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கும் விழா கோவை கொடிசியா வளாகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், வானதி சீனிவாசன் , அமுல்கந்தசாமி மற்றும் வங்கிகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது மத்திய அரசு வசூலிக்கும் செஸ் வரியை முழுவதுமாக மத்திய அரசே வைத்துக் கொள்வதில்லை என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன் அந்த நிதியில் இருந்து நபார்டு வங்கி மூலம் மாநில கூட்டுறவு வங்கிகளுக்கும் 1 சதவீத வட்டியில் கடன் வழங்குவதாக தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது கூட்டத்தில் கடைசியில் நின்று கொண்டிருந்த ஒருவர் கையை உயர்த்தி தான் பல மாதங்களாக வங்கிக்கு நடையாய் நடப்பதாகவும் தனக்கு தொழில் கடன் தரவில்லை என்றும் ஆவேசமாக குரல் எழுப்பியதால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது

மீடியாக்கள் குரல் எழுப்பியவரை படம் பிடிக்க தொடங்கிய நிலையில் மேடையில் நின்றிருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்த நபரை மேடைக்கு வருமாறு அழைத்தார்

மேடைக்கு வந்த அவரிடம் மைக்கை கொடுத்து விவரங்களை கூறுங்கள் எதற்காக கடன் வழங்கவில்லை என்று விசாரிப்போம் என்று கேட்டுக் கொண்டார் நிர்மலா சீத்தாராமன். இதையடுத்து சதீஷ் என்ற அந்த நபர், தான் கிராஸ் கட் சாலையில் தொழில் செய்து வருவதாகவும், தொழில் கடன் கேட்டு , தான் கணக்கு வைத்திருக்கும் பேங் ஆப் பரோடா வங்கிக்கு பல மாதங்களாக அலைந்து திரிவதாகவும், தனக்கு கடன் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் விரைவாக விசாரித்து ஆவணங்கள் சரியாக இருந்தால் கடன் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.

இந்த நிலையில் டால்க் டெல் லைப் ஸ்டைல் என்ற பெயரில் சதீஷ் தனது மனைவி சுபஸ்ரீ மற்றும் மகள் ஸ்மிரிதி ஆகியோரை பார்டனராக கொண்டு தொழில் நிறுவனம் நடத்திவருவதாகவும், மனைவி கிரெடிட்கார்டுக்கு செலுத்த வேண்டிய 1 லட்சத்து 15 ஆயிரத்து 808 ரூபாயை செலுத்தவில்லை என்றும், மகளது வங்கி கணக்கில் ஓவர் டியூ உள்ளதாலும் சிபில் ஸ்கோர் திருப்தியாக இல்லாததால், சதீஷ் அளித்த கடன் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளோம் என்று வங்கி மேலாளர் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ந்தேதி சதீஷுக்கு கடிதம் அனுப்பி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை மறைத்து மத்திய நிதி அமைச்சர் விழாவில் குழப்பம் ஏற்படுத்த சதீஷ் கூச்சலிட்டிருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments