ஏம்புள்ள பேசமாட்டிக்க... கழுத்தில் குத்திச்சாய்த்த கொடூர கொலை சம்பவம்..! பேன்ஸி ஸ்டோர் காதலால் விபரீதம்

0 3038

 நெல்லை டவுண் கீழரத வீதியில் உள்ள பேண்ஸி ஸ்டோர் கடையில் வேலைப்பார்த்த 18 வயது இளம் பெண் கத்தியால் குத்தப்பட்டு குடோனில் சடலமாக கிடந்த சம்பவத்தில் அந்தப்பெண்ணை ஒரு தலையாக காதலித்த, 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடைக்கு வேலைக்கு சென்ற இடத்தில் தங்கள் வீட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட ஆவேச காட்சிகள் தான் இவை..!

நெல்லை டவுன் கீழ ரத வீதியில் உள்ள ராஜா டாய்ஸ் அண்ட் பேன்ஸி மொத்த விற்பனை கடையில் திருப்பணிகரைசல் குளம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகள் சந்தியா என்பவர் வேலைபார்த்து வந்தார். திங்கட்கிழமை காந்திமதி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள கடையில் குடோனில் இருந்து பொருட்களை எடுப்பதற்காக சென்ற சந்தியா நீண்ட நேரமாக கடைக்கு திரும்பவில்லை, இதனால் சந்தேகம் அடைந்த கடையில் வேலை பார்க்கும் பெண்கள் அங்கு சென்று பார்த்த போது கழுத்தில் கத்திக் குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் , இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்தனர், இதே கடையில் வேலைபார்த்து வந்த 17 வயது சிறுவன் , சந்தியாவை ஒரு வருடமாக காதலித்து வந்ததாகவும், இந்த காதல் விவகாரம் தெரிந்து சந்தியாவீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் சந்தியா , அந்த சிறுவனிடம் பேசுவதை நிறுத்தி உள்ளார். இதையடுத்து சந்தியாவின் சகோதரியை செல்போனில் தொடர்பு கொண்டு சிறுவன் , சந்தியாவை பேசச்சொல்லி கெஞ்சி உள்ளான்.

இந்த காதல் சரிப்பட்டு வராது என்று சந்தியாவின் சகோதரி எச்சரித்த நிலையில், கடையில் உரிமையாளருக்கு சிறுவனின் காதல் டார்ச்சர் விவகாரம் தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த 4 தினங்களுக்கு முன்பாக அவனை வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாக கூறப்பட்டுகின்றது. மொத்தமாக தனது காதலுக்கு தடை போடப்பட்டதை உணர்ந்த சிறுவன் கத்தியுடன் வந்ததாகவும், குடோனுக்கு சென்ற சந்தியாவை பின் தொடர்ந்து சென்று பேசுவதற்கு கட்டாயப்படுத்தியதாகவும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு அவன் தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து திரண்ட சந்தியாவின் உறவினர்கள் கதறி அழுதபடியே தங்கள் வீட்டுப்பெண் கொலைக்கு நீதிகேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளி மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்த பின்னர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக நெல்லை டவுனில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சிறுவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments