தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

0 4930

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் பசு மாடு ஒன்றின் மடுக்களில் இருந்து தானாக பால் சுரந்ததால் அதனை கண்டு அதிசயித்த பக்தர்கள் , பசுவைத் தொட்டு வணங்கி பாலை பாத்திரங்களில் பிடித்து குடித்து மகிழ்ந்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்ந்து வரும் உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் தான் பசு தானாக பால் சுரந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது..!

திருச்செந்தூர் கோவிலில் வெளிப்புற வளாகம், வெளி சுற்று பிரகாரம், கடற்கரை பகுதியில்  மாடுகள் அதிக அளவில் சுற்றி திரிவது வழக்கம். மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பும் பொழுது  அவை கோவில் பிரகாரங்களில் சுற்றி திரியும் நிலையில்  கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கொடுக்கும்  பிரசாதம், மற்றும் உணவுப் பொருட்களை மாடுகள் சாப்பிட்டுவிட்டு கோவில் வளாகத்தில் சுற்றித் திரிகின்றன. அப்படி சுற்றித் திரியும் மாடுகளில் ஓன்று கோவில் சண்முக விலாசம் மண்டபம் அருகில்  நின்று கொண்டிருந்தது. கிரி பிரகார பகுதியில் நின்ற  பசுமாட்டின் மடுவில் இருந்து தானாக பால் சுரந்து வழிந்தது. 

பசு தானாக பால் சுரக்கும் காட்சியை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் பால் சுரந்த பசுவை தொட்டு வணங்கி பாலை வாட்டர் கேன் மற்றும் பாத்திரத்தில் பிடித்து சென்றனர். சிலர் அந்தப் பாலை இரு உள்ளங்கைகளில் ஏந்தி பிடித்து குடித்து வணங்கிச் சென்றனர்.

இந்த தகவல் பக்தர்கள் கூட்டத்தில் வேகமாக பரவிய நிலையில் வரிசையில் நின்ற பக்தர்கள் பசுவை அதிசயித்து பார்த்து திவ்ய தரிசனம் செய்யத் தொடங்கினர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகமாக மாட்டுக்கு பிரசாதம் என்ற பெயரில் அதிக பால் சுரக்கும் உணவுகளை வழங்குவதால் ஹார்மோன்கள் அதிகரித்து மடுவிலிருந்து தானாக பால் வடியும் என்று தெரிவித்த கால் நடை மருத்துவர் கர்ப்பிணி பசுமாடாக இருந்தால் வேறு மாடுகள் முட்டி தள்ளினாலும் பால் சுரக்கும்.. தானாக பால் சுரப்பதற்கு பல காரணிகள் உள்ளது. தக்க மருத்துவ பரிசோதனைகள் செய்து அதன் அடிப்படையில் பசுவின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் என்றார்.

மருத்துவ காரணங்கள் பல இருந்தாலும், பசு தானாக பால் சுரந்து சிவலிங்கத்துக்கு அபிசேகம் செய்ததாக புராணக்கதைகளில் கேள்விப்பட்ட பக்தர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. மாட்டின் உரிமையாளர் யார் என்று தெரியாத நிலையில், முறையாக விசாரித்து உரிய முறையில் பசுவை பேணி காக்க வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments