அ.தி.மு.க.வின் அதிரடி முடிவு! கொண்டாடிய தொண்டர்கள்! குதூகலித்த நிர்வாகிகள்..!!

0 2198

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. இதை அ.தி.மு.க.வினர் தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

சென்னையில் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, கட்சித் தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி கொள்வது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில், பிற கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து எதிர்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கட்சியின் முடிவு பற்றி அறிவிக்கப்பட்டதும் அ.தி.மு.க. தலைமையகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

கட்சியின் இந்த முடிவு முன்கூட்டியே கிடைத்த தீபாவளி பரிசு என்றும் இனி அ.தி.மு.க.வுக்கு ஏறுமுகம் தான் என்றும் முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் என் மண், என் மக்கள் யாத்திரையில் ஈடுபட்டிருந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், அ.தி.மு.க.வின் முடிவு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தங்கள் கட்சி மேலிடம் இது பற்றி உரிய நேரத்தில் பேசும் என்று பதிலளித்துள்ளார்.

கட்சியின் அடுத்த நகர்வு குறித்து விவாதிக்க அண்ணாமலையை டெல்லிக்கு வருமாறு பா.ஜ.க. மேலிடம் அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி முறிவு பற்றி கருத்துக் கூறவோ கொண்டாட்டத்தில் ஈடுபடவோ வேண்டாம் என கட்சியினருக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments