ஆலைகளின் கழிவால் கிடைத்த புற்றுநோய்... சிகிச்சைக்கு கூட வழியில்லாமல் திணறும் மக்கள்...

0 1915

ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருக்கும் நிலையில், அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனையில் வசதி இல்லாததால் வெளிமாவட்டங்கள் மற்றும் வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஜவுளி உற்பத்தியில் முன்னணியில் இருந்து வரும் மஞ்சள் மாநகரமான ஈரோட்டில் ஓடும் பாசன வாய்க்காலின் நிலை தான் இது.

பளிங்கு கண்ணாடி போல பாய்ந்து ஓட வேண்டிய வாய்க்கால்கள், பார்த்தோலே அச்சத்தை ஏற்படுத்தும் வண்ணத்தில் ஓடுவதற்கு அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளே காரணமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பவானி ஆறு, காளிங்கராயன் கால்வாய் என முக்கிய பாசன ஆறுகளில் சாயப்பட்டறைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் நேரடியாக கலப்பதால் இந்த நீரை பயன்படுத்தும் பொதுமக்களும், கால்நடைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆலைகளின் கழிவு கலப்பதால், நொய்யல் ஆறு தற்போது கழிவுநீர் ஆறாகவே மாறி விட்டதாக தெரிவித்த சமூக ஆர்வலர்கள் காவிரிக்கும் அதே நிலை ஏற்பட்டு வருவதாகவும் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

கழிவுகள் கலந்த நீரையே குடிநீராக பயன்படுத்தும் மக்கள் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருவதோடு, ஏராளமானவர்கள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு ஈரோடு மாவட்டத்தில் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு இல்லை எனவும், பெங்களூரு, சென்னை, கோவைக்கு தான் செல்ல வேண்டியிருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
எனவே, அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு தனிப்பிரிவு அமைக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சாயம் மற்றும் தோல் தொழிற்சாலைகள் தங்களது கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து மறுபயன்பாட்டிற்கு பயன்படுத்துவதே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என தெரிவித்துள்ள பொதுமக்கள், நீர்நிலைகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments