ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் மறைக்கப்பட்ட சிறுவன்.. கொலையின் திகில் பின்னணி..!

0 3833
ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் மறைக்கப்பட்ட சிறுவன்.. கொலையின் திகில் பின்னணி..!

திருக்கோயிலூர் அருகே வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது மாயமான 2 வயது சிறுவன், ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக சிறுவனின் சித்தப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

2 வயது மகனை பறிகொடுத்து விட்டு பதறும் பெற்றோர்....ஒருபுறம், சிறுவனுக்கு என்ன நடந்தது? என்பதை அறிய திரண்டு நிற்கும் ஊரார் மறுபுறம்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர் அடுத்த திருப்பால பந்தல் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி - ஜெகதீஸ்வரி தம்பதியினரின் 2 வயது மகன் திருமூர்த்தி, கடந்த 17 ந்தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானான்.

சம்பவம் தொடர்பாக திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். இந்த நிலையில் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் குருமூர்த்தி ஒவ்வொரு இடமாக தேடத்தொடங்கினார். அப்போது குருமூர்த்தியின் தம்பி ராஜேஷ் அறைக்குள் இருந்து துர் நாற்றம் வருவதை அறிந்து உள்ளே தேட முயன்றபோது , பூனை ஏதாவது இறந்திருக்கும் என்று ராஜேஷ் தெரிவித்ததால் தேடுவதை நிறுத்திக் கொண்டார். ராஜேஷ் வெளியில் சென்ற பின்னர் அவரது அறையில் இருந்த பழைய ஸ்பீக்கர் பாக்ஸை உடைத்து பார்த்த குருமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.

அந்த ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் தனது செல்ல மகன் திருமூர்த்தி அழுகிய நிலையில் சடலமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு கதறினார். தங்கள் வீட்டு செல்லப்பிள்ளையை சடலமாக கண்ட மொத்த குடும்பத்தினரும் கதறி கண்ணீர் விட்டு அழுதனர்

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரிடம் எம்புள்ளைய இந்த பாக்ஸில தான் அடைச்சி வச்சிருக்கான்.. என்று குருமூர்த்தி கதறி அழுதார். போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மதுக்கடை பார் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த ராஜேஷைப் பிடித்து விசாரித்த போது சொத்துப் பிரச்சனை தொடர்பாக தனது அண்ணனும் , அண்ணியும் தொடர்ந்து தன்னிடம் சண்டையிட்டு வந்ததால், அவர்களது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை ஸ்பீக்கர் பாக்ஸுக்குள் வைத்து அடைத்ததாக தெரிவித்தான். சமயம் பார்த்து சடலத்தை வெளியே தூக்கிச்செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அதற்குள்ளாக துர்நாற்றம் வீசியதால் தான் சிக்கிக் கொண்டதாகவும் ராஜேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments