பிறந்த நாள் பார்ட்டியில்... கெட்டுப்போன சிக்கன் ஷவர்மா.. பரிமாறிய ஹோட்டலுக்கு சீல்...!

0 3334

கெட்டுப்போன சிக்கனில் தயாரிக்கப்பட்ட ஷவர்மா உணவை சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிக்கன் பரிமாறிய உணவகத்திற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்.

பிறந்த நாள் பார்ட்டியில் ஷவர்மாவை சாப்பிட்டு விட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் 13 பேர்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள ஐ-வின்ஸ் என்ற உணவகத்திற்கு நண்பர்களை அழைத்துச் சென்று விருந்து வைத்துள்ளார். சிக்கனை இரும்பு கம்பியில் சொருகி நெருப்பில் வைத்து தயாரிக்கப்படும் ஷவர்மா என்ற உணவையும், ஃப்ரைடு ரைசும் ஆர்டர் செய்து மாணவ-மாணவிகள் சாப்பிட்டுள்ளனர்.

விருந்து முடிந்து கல்லூரி விடுதிக்குச் சென்ற நிலையில் ஞாயிறு காலையில் ஒருவரைத் தொடர்ந்து ஒருவருக்காக வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 13 பேருக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்படவே, உடனடியாக அனைவரையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் விடுதி ஊழியர்கள்.

தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா, மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தாஅருள்மொழி ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து விசாரணை நடத்தினர். அப்போது, இரவில் சிக்கன் சவர்மா சாப்பிட்டதை அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஐ-வின்ஸ் ஹோட்டலுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா. மாணவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என உணவக உரிமையாளர் நவீன்குமாரிடம் கேட்டறிந்த ஆட்சியர், சமையல் கூடத்தையும் பார்வையிட்டார். அங்கு, சமையலுக்காக கெட்டுப்போன இறைச்சி வைத்திருந்தது தெரிய வரவே, மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பவும், உணவகத்திற்கு சீல் வைக்கவும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, கெட்டுப்போன இறைச்சிகளை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்புத்துறையினர், உணவகத்திற்கும் சீல் வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments