18 வகை கலைஞர்களுக்காக ரூ. 13000 கோடியில் திட்டம்! விஸ்வகர்மா பிறந்த நாளில் துவக்கி வைத்த 'விஸ்வகுரு'..!!

0 2384

நாடு முழுவதும் 18 வகையான பாரம்பரிய கைவினைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

டெல்லியில் பிரம்மாண்டமான யஷோ பூமி சர்வதேச மாநாட்டு அரங்கையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.டெல்லியில் மக்களுடன் ஒன்றாக இணைந்து மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார், பிரதமர் நரேந்திர மோடி. டெல்லி துவாரகா செக்டார் 21 பகுதியில் இருந்து பயணத்தை துவக்கிய பிரதமர் பயணிகளுடன் உற்சாகமாக கலந்துரையாடினார்.

பிரதமருக்கு ஹேப்பி பர்த்டே பாட்டுப் பாடி, பயணிகள் பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.

ரயில் பயணத்தின் இறுதியில் விமான நிலைய மெட்ரோவின் விரிவாக்கப்பட்ட சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மெட்ரோ ரயில் ஊழியர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

இதைத் தொடர்ந்து, விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி சர்வதேச பன்னாட்டு மையத்தில் விஸ்வர்கர்மா படத்துக்கு மலர்தூவி வணங்கினார் பிரதமர்.

பன்னாட்டு அரங்கினை சுற்றிப் பார்த்து கைவினைக் கலைஞர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்கள் தயாரித்த பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து, துவராகாவில் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டுள்ள யஷோ பூமி என்ற சர்வதேச மாநாட்டு அரங்கை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

5 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் 8 புள்ளி 9 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரங்கில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அமரக்கூடிய மாநாட்டு மையம், 15 மாநாட்டு அறைகள், 13 கூட்ட அறைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இதே நிகழ்ச்சியில், நாடு முழுவதும் 18 வகையான பாரம்பரிய கைவினைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் தச்சர், பொற்கொல்லர், காலணி தைப்பவர், தையல் கலைஞர் உள்ளிட்ட தொழில் கலைஞர்களுக்கு 13,000 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி, திறன் மேம்பாடு அளிக்கப்படும்.

 பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தொழில் சார்ந்த கருவிகளை வாங்க 15,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும், முதல் தவணையாக ஒரு லட்சம் வரை வட்டியில்லா கடனும், இரண்டாம் தவணையாக 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடனும் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சமூகத்தின் முதுகெலும்பாக கைவினை கலைஞர்கள் திகழ்வதாகவும், அவர்களது வேலைப்பாடுகளை தொழில்நுட்பத்தால் கூட மறு உருவாக்கம் செய்ய முடியாது என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments