ஒரு கிலோ 3 ரூபாய் தான்... வெண்டைக்காய் தோட்டத்தை ஆடுகளை விட்டு அழிக்கும் விவசாயிகள்..!

0 1287

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பல நூறு ஏக்கர்களில் பயிரிடப்பட்ட வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாக இருந்தும், ஒருகிலோ 3 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் கேட்பதால் வெண்டைக்காய் தோட்டத்தில் ஆடுகளை மேய விட்டு அழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெண்டைக்காய் பயிரிடப்பட்டுள்ளது . ஞாபகசக்தியின் உந்து சக்தி என்று மருத்துவர்களால் போற்றப்படும் இந்த வெண்டைக்காய்களை இங்கிருந்து தூத்துக்குடி கோவில்பட்டி நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்திகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் வரலாறு காணாத அளவில் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. வழக்கமாக ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகரித்து வரத்து அதிகமாக இருப்பதாலும் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பல ஏக்கரில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளோம். முறையாக நீர் பாய்ச்சி, உரம் வைத்து பேணியதால் விளைச்சல் அதிகமாக இருந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட வெண்டைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வியாபாரிகள் எங்களிடமிருந்து ஒரு கிலோ வெண்டைக்காய் 3 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். பறி கூலி கூட கொடுக்க இயலாததால் வெண்டைக்காயை பறிக்காமல் கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்

கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ 15 ரூபாயில் இருந்து 25 ரூபாய் வரையிலும், வெளி கடைகளில் 25 ரூபாய் வரை விலைவைத்து விற்கப்படும் வெண்டைக்காயை தமிழக அரசு உரிய விலை கொடுத்து நேரடியாக கொள்முதல் செய்து பண்ணை பசுமை காய்கறி கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடி மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments