எக்குத்தப்பா கைய வச்ச.. தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு தர்ம அடி..!

0 2420

திருப்பத்தூரில் நள்ளிரவில் வயிற்றுவலி சிகிச்சைக்கு சென்ற பெண் பல்மருத்துவரிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தனியார் மருத்துவரின் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவரை போலீசார் கைது செய்தனர்

நள்ளிரவில் வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி சிகிச்சைக்கு சென்ற பெண் பல் மருத்துவருக்கு தனியார் மருத்துவ மனையில் நேர்ந்த கொடுமை தான் இது..!

திருப்பத்தூர் போஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த 22 வயதான பெண் பல் மருத்துவர் ஒருவர் , கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டிற்கு வந்த பொழுது செவ்வாய்கிழமை இரவு சுமார் 12 மணி அளவில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற பொழுது அங்கு இரவு நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் இல்லை. இதையடுத்து தன்னுடைய வீட்டிற்கு அருகாமையில் அனுமந்த உபாசகர் பேட்டை பகுதியில் உள்ள 24/7 விஷ முறிவு மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனையில் உள்ள மருத்துவர் தியாகராஜனிடம் சிகிச்சைக்கு சென்ற போது தன்னிடம் மருத்துவர் தியாகராஜன் பாலியல் சீண்டல் செய்ததால் மருத்துவமனையை விட்டு வெளியில் வந்ததாக புகார் தெரிவித்தார் அந்த பல் மருத்துவர்

மருத்துவமனைக்கு வெளியில் வந்து அங்கிருந்த செவிலியரிடம் வலிக்கு மட்டுமாவது ஊசி போடச்சொன்னதாகவும் அவர்கள் ஊசியோ மாத்திரையோ கொடுக்க மறுத்து விட்டதாகவும் , தனது உறவினர்களுடன் சென்று நியாயம் கேட்ட போது மருத்துவர் தாக்கியதால் பதிலுக்கு திருப்பி தாக்கியதாக பெண் மருத்துவர் தெரிவித்தார்

மருத்துவருடன் ஏற்பட்ட மோதலின் போது மருத்துவ மனையில் இருந்த பிளாஸ்டிக் சேர் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டது. பெண் பல் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி விசாரணைக்குப்பின் மருத்துவர் தியாகராஜனை கைது செய்தார்.

மருத்துவமனையில் தாக்குதல் நடத்தியதாக பெண் மருத்துவரின் உறவினர்கள் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளின் நலன் கருதி இரவு மருத்துவர் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள மக்கள், அங்கு மருத்துவர் இருந்திருந்தால், தனியார் மருத்துவமனையில் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்காது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments