திமுக பிரமுகர்கள் 2 பேர் மீது இரண்டரை லட்ச ரூபாயை மோசடி செய்ததாக துணை நடிகர் காவல் நிலையத்தில் புகார்
2 ஆண்டுகளுக்கு முன் மோசடி பேர்வழிகளிடம் இழந்த 53 லட்ச ரூபாயை மீட்டு தருவதாக கூறி திமுக பிரமுகர்கள் 2 பேர் இரண்டரை லட்ச ரூபாயை மோசடி செய்ததாக ஆத்மா பேட்ரிக் என்ற திரைப்பட துணை நடிகர் சென்னை கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிகில், தெறி, டாக்டர் போன்ற படங்களில் நடித்த ஆத்மா பேட்ரிக், 2021-இல் சுரேஷ் ராமநாதன் என்பவர் ஆசை வார்த்தை கூறியதன் பேரில் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஒன்றில் 53 லட்ச ரூபாய் முதலீடு செய்ததாகவும், அந்தத் தொகையை சுரேஷ் ராமநாதன் ஏமாற்றி விட்டதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.
2 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை போலீசார் பணத்தை மீட்டுத் தரவில்லை என்று கூறி கடந்த மார்ச் மாதம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் திமுக பிரமுகர்கள் கமல் தாஸ் மற்றும் ஆனந்தை அணுகியதாக பேட்ரிக் கூறியுள்ளார்.
பணத்தை மீட்டுத் தர அவர்கள் 7 லட்ச ரூபாய் கமிஷன் கேட்டதாகவும், அதற்கு முன்பணமாக இரண்டரை லட்ச ரூபாயையும், தனது காரையும் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டு தன்னை இருவரும் அலைக்கழித்துவருவதாக பேட்ரிக் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
Comments