அரியவகை முதுகெலும்பு தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் மருத்துவச் செலவுக்கு தமிழக அரசு உதவிட பெற்றோர் கோரிக்கை..!
சென்னையை சேர்ந்த பொறியாளர் தம்பதியின் பெண் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள மிக அபூர்வமான முதுகெலும்பு தசைநார் சிதைவு நோய் சிகிச்சைக்கு 17 கோடி ரூபாய் செலவாகும் என்பதால் தமிழ்நாடு அரசு உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன், பிரியா தம்பதியின் பெண் குழந்தையான சந்தனா, ஓராண்டு வரை வழக்கமான குழந்தைகள் போலவே இருந்துள்ளார். ஆனால் நடக்க வேண்டிய வயதில் நடக்காததால், குழந்தைக்கு நடத்தப்பட்ட சோதனையில் முதுகெலும்பு தசைநார் சிதைவு நோய் இருப்பது தெரியவந்தது. இதற்கான மருந்தின் விலை 17 கோடி ரூபாய் என்றும், இரண்டு வயதுக்குள் உரிய மருந்து கொடுக்காவிட்டால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறுகிறார் வெங்கடேசன்.
அமெரிக்காவில் இருந்து இந்த மருந்தை கொண்டு வந்து தனது குழந்தைக்கு செலுத்தினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறும் வெங்கடேசன், தமிழக முதலமைச்சர் தனது குழந்தையை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 3,200 குழந்தைகள் முதுகெலும்பு தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இருந்த போதிலும் இந்தியாவில் அரிய நோய் என்பதால் மத்திய மாநில அரசுகள் மற்றும் சுகாதாரத்துறையினர் இந்த மருந்துகள் உற்பத்தி செய்வதற்கு போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
Comments