அதிகாரிகள் என்ன திருடர்களா ? ஒன்றியக் குழு கூட்டத்திலிருந்து கோபித்துக் கொண்டு ஓடிய பி.டி.ஓ

0 1377

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து ஒன்றியக் குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பிய கவுன்சிலர்களுக்கு பதில் அளிக்காமல், கூட்டத்தை படம் பிடித்துக் கொண்டிருந்த பிடிஓ (BDO), "அதிகாரிகள் என்ன திருடர்களா? மீடியாவ கூப்பிட்டு அசிங்கப்படுத்துறீங்க" என்று ஆவேசமாக சத்தமிட்டுக் கொண்டே வெளியேறினார்.

மாமியார் வீட்டில் இருந்து முறுக்கிக் கொண்டு செல்லும் மாப்பிள்ளை போல ஒன்றியக்குழுக் கூட்டத்தில் இருந்து வெளியேறிய கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரி குமரேசன் இவர் தான்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் கேசவமூர்த்தி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பி.டி.ஓக்களான குமரேசன் மற்றும் சாந்தலட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

8 மாதங்களுக்கு பின்னர் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், நமது ஒன்றியத்திற்கு இதுவரை எத்தனை திட்டங்கள் வந்துள்ளன?அதற்கான நிதிஒதுக்கீடு எவ்வளவு? என, பிடிஓக்களிடம் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பிடிஓ சாந்தலட்சுமி மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார்.

'கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்' என்று ஒன்றியக் குழுத் தலைவர் கேசவமூர்த்தி கேட்டபோதும் அதிகாரிகள் வாய்திறக்கவில்லை. இதனை செய்தியாளர்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

கவுன்சிலர்களின் கேள்விக்கு பதில் சொல்லாத பி.டி.ஓ சாந்த லட்சுமி 'விட்டால் போதும்' என செல்போன் பேசியவாறே எழுந்து நடையைக் கட்டினார்.

செய்தியாளர்களுக்கு டஃப் கொடுக்க நினைத்த பி.டி.ஓ குமரேசன் செய்தியாளர்களையும் கவுன்சிலர்களையும் தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

'நாங்கள் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லையே' என்று கவுன்சிலர்கள் மீண்டும் கேள்வி எழுப்பியதும், ஆவேசமாக எழுந்த குமரேசன், 'அதிகாரிகள் என்ன திருடர்களா? மீடியாவை வைத்து எங்களை அசிங்கப்படுத்தப் பார்க்கறீங்களா?' என்று சத்தமிட்டுக் கொண்டே வெளியேறினார்.

இதனைக் கேட்ட செய்தியாளர்கள், பி.டி.ஓ குமரேசனை பின்தொடர்ந்து சென்று எதிர்கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளிக்காமல் மீண்டும் கூட்ட அரங்கிற்குள் சென்ற குமரேசன், அங்கிருந்த பெண் அதிகாரியிடம் சைகை காட்டிவிட்டு, விட்டால் போதுமென்று ஓட்டமெடுத்தார்.

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகளான குமரேசனும் சாந்தலட்சுமியும், மக்களுக்கு என்ன பணிகள் செய்து வருகிறோம் என்று சொல்ல இயலாத அளவுக்கு அப்படி என்ன ரகசியப் பணிகள் மேற்கொள்கின்றனர் ? என்பதே கவுன்சிலர்களின் ஆதங்கமாக இருந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments