தமிழகத்தில் களை கட்டிய ஓணம் திருவிழா.. கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்த மக்கள்..!

0 2000

ஓணம் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொண்டாட்டங்கள் களைக்கட்டின...

சென்னை மஹாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் பாரம்பரிய உடை அணிந்த மலையாள மக்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். ஓணத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

ஓணம் பண்டிகை கேரளா மட்டுமன்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவது சந்தோஷம் அளிப்பதாக மஹாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த பெண்கள் தெரிவித்தனர்.

இந்த கோவிலில் பாடகர் நாராயணன் ரவி சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து தனது குழந்தைக்கு அன்னப் பிரசன்னம் செய்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சபரிமலை கோயிலை போன்றே இருப்பதால் ராஜா அண்ணாமலைபுரம் கோயிலுக்கு வந்ததாக தரிசனம் செய்தவர்கள் தெரிவித்தனர். வீட்டில் அத்தப்பூ கோலமிட்டு, 20-க்கும் மேற்பட்ட உணவுகளை சதய விருந்தாக சமைத்து ஓணம் கொண்டாடி வருவதாக அவர்கள் கூறினர்.

சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீ குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜனம் சார்பாக ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. குருவாயூரப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பாரம்பரிய முறைப்படி பூஜைகள் நடைபெற்றன.

சென்னை ஆவடியில் உள்ள மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மலர்களால் அழகிய கோலமிட்டு நடுவில் சந்திராயன் மூன்றின் விக்ரம் லேண்டரை ரீ கிரியேட் செய்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை பெருமைப்படுத்தும் விதமாக மாணவிகள் ஓணத்தை கொண்டாடினர்.

காஞ்சிபுரம் சவிதா செவிலியர் கல்லூரி, சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் சார்பில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட அத்தப்பூ கோலமிட்டும், மகாபலி சக்கரவர்த்தி போல வேடமிட்டும், செண்டை மேளம் இசைத்தும், குழு நடனம் ஆடியும், உரியடி விழா நடத்தியும் மாணாக்கர்கள் ஓணத்தை கொண்டாடினர்.

கோவை சித்தாப்புதூர் கோயிலில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகளவில் தரிசனம் செய்தனர்.

கோவையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அத்தப்பூ கோலம் போட்டு நடனம் ஆடி ஓணத்தை கொண்டாடினார்.

திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஓணத்தை முன்னிட்டு மாணவிகள் உற்சாக நடனமாடினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments