ரூ.5 லட்சம் வருமானமாம் 10-ம் வகுப்பு மாணவிக்கு...!! மாத்தி யோசித்ததால் கிடைத்த வெற்றி...!!!

0 2500

பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவர், ஓராண்டில் 5 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதோடு, ஐ.ஐ.டி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சாளராகவும், தமிழகத்தின் இளம் ஊட்டச்சத்து தூதுவராகவும் உயர்ந்ததன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவரான லஷ்மிநாராயணன், மேல்படிப்பு படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுபாலட்சுமி, மகளின் படிப்பிற்காக தனியார் பள்ளி ஆசிரியை பணியை உதறியவர். இவர்களின் மகள் தான் சாதனை மாணவி ஹாசினி. இந்த 15 வயது இளம் தொழில் முனைவோர், தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் உரை நிகழ்த்தி, கடந்தாண்டில் 5 லட்சம் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ள ஹாசினி, தமிழ்நாட்டின் இளம் ஊட்டச்சத்து தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மற்றவர்களை செய்த நேர்காணலையும், எழுத்துக்களையும் இணையதளத்தில் சுமார் 80 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பதே இவரது ஆற்றலின் வெளிப்பாடு தான்.

அடுக்கடுக்கான சாதனைகளை இவ்வளவு சின்ன வயதில் எப்படி செய்ய முடிந்தது என்ற கேள்விக்கு, வெரி சிம்பிள் தான் என்றார் ஹாசினி. 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் ஹாசினி.

வீட்டில் சும்மா இருக்காமல் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த ஹாசினி, பள்ளியில் படிக்கும் போதே சாதனையாளர்களாக உருவெடுத்த மாணவர்களை பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும் என நினைத்தார். அவரது எண்ணத்திற்கு உதவி செய்ய முன்வந்தார் தந்தை லஷ்மிநாராயணன்.

ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு செமினார் நடத்த சென்றிருப்பதால் முதற்கட்டமாக 25 பேரை தேர்வு செய்து கொடுத்தார் லஷ்மிநாராயணன். அவர்களிடம் ஜூமில் நேர்காணல் நடத்திய ஹாசினி, 'Guiding Young Minds' என்ற இணைய பத்திரிகையை ஆரம்பித்து அந்த பேட்டிகளை வெளியிட்டார்.

ஏழு முதல் 17 வயதுக்குட்பட்ட இளம் சாதனையாளர்கள் 25 பேரின் நேர்காணல்களை First Step என்ற புத்தகமாகவும், 20 குழந்தைகளின் பேட்டிகளை உரையாடல் வடிவில் தொகுத்து 'Whizz Kids' என்ற புத்தகமாகவும் வெளியிட்டார் ஹாசினி.

ஹாசினியின் எழுத்துக்கள் மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெறவே, கல்வி நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் கவனத்தையும் பெற்றார். இதனால், செமினார் மற்றும் வொர்க் ஷாப்களை நடத்த வந்த அழைப்புகளை ஏற்று வாரணாசி ஐஐடி உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள், கார்பரேட் நிறுவனங்களில் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தி உள்ளார் ஹாசினி.

வளர்ந்த பிறகு ஏதாவது கற்று அதன் பிறகு தொழில் துவங்கலாம் என்பதை விட சிறு வயதில் இருந்தே ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் என் எண்ணம் என கூறும் ஹாசினி, நம்மாலும் முடியும் என்று ஒருவருக்காவது எனது எழுத்துக்கள் உத்வேகம் அளித்தால் அதுவே பெரிய வெற்றி தான் எனவும் தெரிவித்தார் ஹாசினி.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments