25 நாட்களில் தவிக்க விட்டு ஓடிய போலீஸ் கணவரால் பலியான இளம்பெண்..! போலீசார் அலைக்கழிப்பால் விபரீதம்..!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திருமணம் முடிந்த 25 நாட்களில் தவிக்க விட்டு ஓடிய, போலீஸ்கார கணவரின் வீட்டின் முன்பு மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்த மகளிர் போலீசாரின் மெத்தனத்தால், பாதிக்கப்பட்ட பெண் உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதம் அரங்கேறி உள்ளது.
போலீஸ் மருமகனுடன் திருமண ஊர்வலம் போன தங்கள் வீட்டுப்பெண்... இவ்வளவு சீக்கிரம் சடலமாக போவாள் என்று கணவிலும் நினைத்திருக்க மாட்டார் குமுதாவின் தாய்..!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி கிராமம் வ.உ.சி நகரை சேர்ந்த சின்னத்துரை என்பவரது மகள் குமுதாவுக்கும் ஆவுடையானூர் அருகே உள்ள ராயப்பநாடானூர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதத்தின் மகன் சுதர்சனுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சென்னையில் காவலராக பணிபுரிந்து வரும் சுதர்சன், திருமணமாகி 25 நாட்கள் குமுதாவுடன் குடும்பம் நடத்திவிட்டு , சென்னைக்கு சென்று வீடு பார்த்துவிட்டு வந்து அழைத்துச் செல்வதாக கூறி, குமுதாவை தாய் வீட்டில் விட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் குமுதா தொடர்பு கொண்டு பேசிய போது, தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறிய சுதர்சன், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என பேசாமல் நிராகரித்ததாக கூறப்படுகின்றது
ஊர் பெரியவர்கள் தொடங்கி, அனைத்து மகளிர் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதல் அமைச்சரின் தனிப்பிரிவு என பல மட்டத்தில் புகார் அளித்த நிலையில் புகார்கள் அனைத்தும் மகளிர் காவல் நிலைய போலீசாரிடமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அவர்களும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் குமுதாவை அலைக்கழித்துள்ளனர்
கடந்த 6 மாதமாக தனது தாய் வீடான கல்லூரணியில் கணவன் திரும்பி வருவான் என்று ஏக்கத்துடன் காத்திருந்த குமுதா, செவ்வாய்கிழமை இரவு சுதர்சன் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்ததை அறிந்து சுதர்சனை தேடிச்சென்றார். அவரை வீட்டுக்குள் அனுமதிக்காததால், வீட்டு வாசலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுதர்சன் காவல்துறையில் பணிபுரிவதால் பாவூர்சத்திரம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை... எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை . நள்ளிரவில் சுதர்சனின் தாய் தந்தை வீட்டை பூட்டி சென்றனர். இந்த நிலையில் காலையில் மற்றொரு செல்போன் நம்பரில் குமுதாவை அழைத்து பேசிய சுதர்சன், கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும், இதனால் விரத்தி அடைந்த குமுதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்
குமுதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.குமுதாவிற்கு மனநிலை சரியில்லை என்று சுதர்சன் புகார் தெரிவித்ததாகவும் , பதிலுக்கு குமுதா உறவினர்களும் சுதர்சன் மீது ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. இருதரப்பு புகாரையும் விசாரித்து மகளிர் போலீசார் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் தகப்பன் இல்லா ஒரு அப்பாவி பெண்ணின் உயிர் இப்படி அநியாயமாக பறிபோயிருக்காது... என்பதே உறவினர்களின் ஆதங்கமாக உள்ளது.
Comments