மணிப்பூரில் பாரதத் தாய் படுகொலை செய்யப்பட்டுள்ளார் - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

பாரதத் தாய் மணிப்பூரில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தின் மீது பேசிய ராகுல், தான் நம்பும் விஷயத்துக்காக உயிரை விடவும், பிரதமர் விரும்பினால் சிறைக்கு செல்லவும் தயார் என்றார்.
மணிப்பூரை நாட்டின் ஒரு பகுதியாக கருதாததால் தான் இந்நாள் வரை பிரதமர் அங்கு செல்லவில்லை என்று கூறிய ராகுல் காந்தி, மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களில் இருந்த பெண்களிடம் பேசிய போது, அவர்கள் பயங்கரமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாக தெரிவித்தார்.
மணிப்பூரில் இந்தியா என்ற சித்தாந்தத்தையே அரசு கொன்றுவிட்டதாக அவர் குறிப்பிட்டார். உடனே ஆளுங்கட்சி எம்.பி.க்கள், ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பா.ஜ.க.வினர் தேச பக்தர்கள் அல்ல, தேசத் துரோகிகள் என்று குறிப்பிட்ட ராகுல், தனது ஒரு தாய் மக்களவையில் அமர்ந்திருப்பதாகவும், மற்றொரு தாயை மணிப்பூரில் கொன்றிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மேகநாதன் மற்றும் கும்பகர்ணன் பேச்சை ராவணன் கேட்டுக் கொண்டிருந்ததைப் போல, இப்போது அமித் ஷா மற்றும் அதானி பேச்சை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
ராவணனின் அகங்காரத்தால் இலங்கை பற்றி எரிந்ததைப் போல, அரசின் அகங்காரத்தால் மணிப்பூர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் எரிந்து கொண்டிருப்பதாகவும் ராகுல் கூறினார். ராகுல் காந்தி பேசி முடித்ததும் மோடி, மோடி என பா.ஜ.க. எம்.பி.க்களும், அதற்கு பதிலாக இண்டியா, இண்டியா என எதிர்க்கட்சியினரும் முழக்கமிட்டனர்.
Comments