திமுக எம்.எல்.ஏ ஓட்டலில் சினிமா இயக்குனர் கொலை.. சிறையில் அரங்கேறிய பிளான்..! பா.ஜ.க பிரமுகர் உள்பட 21 பேர் கைது
திமுக எம்.எல்.ஏவிற்கு சொந்தமான ஸ்டார் ஓட்டலின் மதுபாரில் வைத்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பா. ஜ.க பிரமுகர் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரு நகரங்களில் உள்ளது போன்று திமுக எம்.எல்.ஏ பெரம்பலூரில் கட்டிவைத்துள்ள இந்த ஸ்டார் ஓட்டலின் பாரில் தான் அந்த படுகொலை அரங்கேறியது.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் தேசம் என்ற சினிமா படத்தை இயக்கிய இவர் இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் தனது பெயரை அப்துல்ரகுமான் என மாற்றிக்கொண்டார். திமுக கிளை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இவர் மீது இரண்டு கொலை வழக்குகள், வழிப்பறி கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. பிரபல ரவுடியாகவும் இருந்து வந்தார்.
கடந்த ஜூன் 5ம் தேதி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள மண்ணச்சநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ., கதிரவனுக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் உள்ள மதுபான பாரில் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த போது, மர்மக்கும்பலால் திரைப்பட இயக்குனர் செல்வராஜ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பெரம்பலூர் போலீசாரின் விசாரணையில் ஜெயிலுக்குள் இருந்து பிரபல ரவுடி ஒருவன் கூலிப்படை கூட்டாளிகள் மூலம் செல்வராஜை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த பிரபல ரவுடியான அழகிரிக்கும் கொலையான ரவுடி செல்வராஜ்க்கும் தொழில் போட்டி இருந்துள்ளது. நில விவகாரங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் செல்வராஜ் தற்போது அதிக அளவில் ஈடுபடுவதால், அழகிரியின் குடும்பத்தினருக்கு வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது, தனது செல்வாக்கு குறைந்து வந்ததாக உணர்ந்த அழகிரி தான் ஜெயிலில் ஆயுள் கைதியாக இருக்கும் நிலையில், செல்வராஜை தீர்த்துக்கட்ட அங்கிருந்தே திட்டம் தீட்டியுள்ளார்.
தனது நண்பரான பா.ஜ.க பட்டியலின மாவட்ட துணை தலைவர் ஜெயபாலாஜி என்பவரின் உதவியை நாடினார். இதையடுத்து அழகிரியின் திட்டப்படி, ஜெயபாலாஜி திருச்சி மற்றும் பெரம்பலூரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ரவுடி கும்பலை களமிறக்கி, செல்வராஜை சரமாரியாக வெட்டி கொலை செய்ததும் தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கில், ஏற்கனவே அழகிரியியின் தங்கை ரமணி, அவரது கணவர் பிரேம் ஆனந்த், பெரம்பலூர் மேட்டுத்தெருவை சேர்ந்த அபினேஷ், நவீன், மற்றொரு நவீன், அழகிரியின் மனைவி சங்கீதா மற்றும் ஜெயபாலாஜி உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜெயபாலாஜியின் மனைவியும் அரசு பள்ளி ஆசிரியையுமான சுலோச்சனாவையும், பெரம்பலூர் மாவட்ட தனிப்படை போலீசார், திண்டிவனத்தில் அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த போது கைது செய்து, பெரம்பலூர் அழைத்து வந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
தொடர்ந்து ஆசிரியை சுலோச்சனாவை பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். வழக்கமாக கொலையாளிகள் சிக்கவில்லையென்றால் அவரது மனைவி, தாய் தந்தையை பிடித்து வைத்து போலீசார் மிரட்டுவது வழக்கம். ஆனால் இந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் அவரது மனைவி மற்றும் சகோதரியையும் போலீசார் கைது செய்து வருவது குறிப்பிடதக்கது.
Comments