சென்ட்ரல் டூ எக்மோருக்கு ரூ.1,800...! பீகார் தொழிலாளர்களை ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் கைது...!

0 5194

பீகாரில் இருந்து சென்னை வந்த கூலித் தொழிலாளர்கள் 19 பேரை மிக மோசமாக ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவில் சென்டரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய தொழிலாளர்களை, எழும்பூரில் இறக்கி விடுவதாக ஏற்றிச் சென்று, 30 கிலோ மீட்டருக்கு அப்பால் கிழக்குக் கடற்கரை சாலையில் இறக்கிவிட்டு, அடாவடி செய்தது பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

பிழைப்புத் தேடி வந்த அப்பாவி பீகார் தொழிலாளர்களை, ஏமாற்றிக் கைதாகியுள்ள அந்த 6 ஆட்டோ ஓட்டுநர்கள் இவர்கள்தான்.

புதுச்சேரியில் கட்டிட வேலை செய்வதற்காக, ஏஜெண்ட் மூலமாக அழைத்து வரப்பட்ட இவர்கள், நள்ளிரவில் கவுஹாத்தி ரயிலில் வந்து இறங்கினர். சென்னையில் இருந்து புதுச்சேரிக்குச் செல்ல வேண்டுமே என்று விசாரித்தபோது, காலை 6:25 மணிக்கு, எழும்பூரில் இருந்து பயணிகள் ரயில் புறப்படும் என்பதை அறிந்தனர்.

உடனடியாக எழும்பூர் செல்ல, வால்டாக்ஸ் சாலைக்குச் சென்ற அவர்கள், ஆட்டோ பிடிக்க முற்பட்டனர். வெகுதூரம் செல்ல வேண்டும்; ஆகையால், ஆட்டோவிற்கு 3 பேர் வீதம் ஏறும்படி ஓட்டுநர்கள் கூறியதை நம்பி, 6 ஆட்டோக்களில் 19 பேரும் ஏறினர். ஆனால், 2 கிலோ மீட்டரில் உள்ள எழும்பூருக்குச் செல்லவில்லை அந்த 6 ஆட்டோக்கள்...

மாறாக, 30 கிலோ மீட்டர் தூரத்தில், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி என்ற இடத்திற்குச் சென்று இறக்கிவிடப்பட்டனர். எழும்பூர்; பெரிய ரயில் நிலையம் என்று கேள்விப் பட்டுள்ளோமே... ஆனால் அதற்கான அறிகுறியே இல்லையே என்று தொழிலாளர்கள் சந்தேகித்துக் கொண்டிக்கும் போதே, தலைக்கு ஆயிரத்து 800 ரூபாய் கொடுக்குமாறு கேட்டு ஓட்டுநர்கள் மிரட்ட, அதிர்ச்சியடைந்து தர மறுத்த தொழிலாளர்களை தாக்கியுள்ளனர்.

உடனே சுதாரித்த தொழிலாளர்களில் ஒருவர், 100 என்ற எண்ணில், காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டதும், கீழ்பாக்கம் துணை ஆணையர் கோபி தலைமையில் போலீசார் விரைந்துச் சென்றனர். அப்போதும் அங்கு தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஓட்டுநர்களை அப்படியே சுற்றிவளைத்து ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில், சில ஆட்டோ ஓட்டுநர்கள் இதுபோன்ற மோசடிகளை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். மொழி தெரியாமலும், சென்னையின் ஏரியாக்களை தெரியாமலும் வெளியூர்களில் இருந்து வருபவர்களே இவர்களின் குறி என்றும் போலீஸார் குறிப்பிட்டனர். 

நள்ளிரவில் மொழி தெரியாத ஊரில், இதுபோன்ற மோசடிகளில் சிக்குவது, நினைத்துப் பார்க்க முடியாத வேதனையாகும். சென்னை போன்ற பெருநகரங்களில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments