விவசாயி உடலில் ஏறி இறங்கிய டிராக்டர்.. தானாக ஓடியதால் சம்பவம்..! தனக்கு தானே சூனியம் வைத்த காட்சிகள்
டீசல் நிரப்புவதற்காக காத்திருந்த டிராக்டர் ஒன்றில் இருந்து விவசாயி இறங்கிய நிலையில் , தானாக ஓடிய டிராக்டரை தடுக்க இயலாமல் சக்கரத்துக்கு அடியில் சிக்கிய விவசாயி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய பதை பதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது
தானாக ஓடிய டிராக்டரை தடுக்க முயன்று சக்கரத்துக்குள் சிக்கி உயிரோடு எழுந்த விவசாயி கிருஷ்ணாரெட்டி இவர் தான்..!
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், பெத்தாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணா ரெட்டி, இவர் உழவு வேலைகளுக்கு பயன்படுத்துவதற்காக சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். சம்பவத்தன்று தனது டிராக்டருக்கு டீசல் போடுவதற்காக பங்க் சென்ற அவர், என்ஜினைஆப் செய்யாமல் டிராக்டரில் இருந்து இறங்கினார்
டிராக்டர் கியரில் இருந்ததால் தானாக ஓடத்தொடங்கியது, இதனை சற்றும் எதிர்பாராத கிருஷ்ணா ரெட்டி, டிராக்டரை தனது கையால் தடுத்து நிறுத்த முயன்றார் அவரால் முடியவில்லை
லுங்கி அணிந்திருந்ததால் அவரால் உடனடியாக ஏறி பிரேக்கையும் அழுத்த இயலவில்லை, உடலால் தடுத்து நிறுத்த முயன்ற போது அவர் மீது டிராக்டரின் பெரிய சக்கரமும், பின்பக்கம் பொறுத்தப்பட்டிருந்த டிரைலரின் சக்கரங்களும் ஏறி இறங்கியது. அருகில் நின்ற சரக்கு வாகன ஓட்டுனர் தனது வாகனத்தை தள்ளிக் கொண்டு ஓடினார்
இதனை பார்த்த அங்கிருந்த ஒருவர் ஓடி வந்து டிராக்டரில் ஏறி, வலது பக்கம் இருந்த பிரேக்கை அழுத்தி மேற்கொண்டு அசம்பாவிதம் நிகழாமல் தடுத்தார். அதற்குள்ளாக டிராக்டர் ஏறி இறங்கிய விவசாயி கிருஷ்ணா காயங்களுடன் எழுந்து அமர்ந்தார்.
டிராக்டர் சக்கரம் பெரிய அளவில் இருக்கும் நிலையில் அவர் எப்படி உயிர் தப்பினார் என்று அனைவரும் அதிசயமாக பார்த்தனர்.
இதில் அவரது கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததால் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்து தொடர்பாக பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாகனங்களை இயக்குவோர், கவனக்குறைவாக கியரை நியூட்ரலுக்கு கொண்டு வராமல் என்ஜினை மட்டும் ஓடவிட்டு வண்டியில் இருந்து இறங்கினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.
Comments