தி.மு.க. பிரமுகரை வெட்டிய 2 ரவுடிகளை சுட்டுக் கொன்ற போலீசார்..! மாமூல் ரவுடிகளுக்கு இறுதி எச்சரிக்கை
மாமூல் தராத தி.மு.க. பிரமுகரை விரட்டி விரட்டி வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த 2 ரவுடிகளை போலீசார் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொன்ற சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் இவர்கள் தான்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள ஆதனூரைச் சேர்ந்தவர் சர்க்கரை என்ற சக்கரபாணி. அப்பகுதி தி.மு.க அவை தலைவராக உள்ள சக்கரபாணி மணல், ஜல்லி விற்பனை செய்து வருவதோடு கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வருகிறார். இவரிடம் மாமூல் கேட்டு மிரட்டி வந்த ரவுடி கும்பல் ஒன்று ஜூலை மாதம் 12 ஆம் தேதி சக்கரபாணியை ஓட ஓட விரட்டி வெட்டி விட்டு தப்பி ஓடியது.
இந்த வழக்கு தொடர்பாக 4 பேர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், மேலும் 3 பேரை மணிமங்கலம் போலீஸார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த வினோத் என்கிற சோட்டா வினோத், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சோட்டா வினோத் தனது கூட்டாளிகளுடன் ஊரப்பாக்கம் காரணி- புதுச்சேரி சாலையில் காரில் சென்றுக் கொண்டிருப்பதாக கூடுவாஞ்சேரி போலீஸாருக்கு ரகசிய தவகல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீஸார் அருங்கால் சாலையில் அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சோட்டோ வினோத் வந்த ஸ்கோடா கார் போலீஸாரின் வாகனம் மீது மோதியதாகவும், காரிலிருந்த இறங்கிய 4 பேர், தங்களை பிடிக்க காத்திருந்த போலீஸாரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர்ர ஆயுதங்களால் வெட்ட பாய்ந்தனர். இதில் தடுக்க முயன்ற எஸ்.ஐ சிவகுருநாதனின் வலது கையில் வெட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் முருகசேன் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் 6 ரவுண்ட் சுட்டதில் சோட்டோ வினோத் உடம்பில் 3 குண்டுகளும், ரமேஷ் உடம்பில் 2 குண்டுகளும் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டு மற்ற 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் இதனையடுத்து, காயமடைந்த எஸ்.ஐ சிவகுரு நாதனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
என்கவுன்டர் நடைபெற்ற இடத்தை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.
குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.ஐ சிவகுருநாதனை தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவால் சந்தித்து நலம் விசாரித்தார்.
தங்களை தாக்கிய ரவுடிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள போலீஸார்சுட்டதில் 2 பேர் உயிரிழந்ததாக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட சோட்டா வினோத் மீது, 10 கொலை, 16 கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகளும், ரமேஷ் மீது 5 கொலை, 7 கொலை முயற்சி உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும் இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் எனவும் போலீஸார் தெரிவித்தனர். தப்பியோடிய இருவர் 2 பேர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்த டி.ஜி.பி., இருவரையும் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.
என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களின் சடலம் உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. என்கவுன்டர் நடைபெற்ற இடம் ரவுடிகளின் கூடாராமாக விளங்கி வரும் பகுதி என்பதால் இந்த நடவடிக்கையை அப்பகுதியினர் வரவேற்றுள்ளனர்.
இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் போலீசார் பாரபட்சம்மின்றி ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments